வேப்பூர் அருகே பரபரப்பு காப்புக்காட்டில் சிறுத்தை நடமாட்டம்?

2 months ago 6

வேப்பூர், நவ. 26: காப்புக்காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் பீதி அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 23ம் தேதி இரவு அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது காப்புக்காடு பகுதியில் சிறுத்தை போன்ற மர்ம விலங்கு ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. இதை பார்த்த ரமேஷ் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு அலறியடித்துக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து கிராம மக்களிடம் அவர் தெரிவித்ததையடுத்து, மாளிகைமேடு ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் வனத்துறை அதிகாரிகள் மாளிகைமேடு சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த மர்ம விலங்கின் கால் தடத்தை ஆய்வு செய்தபோது, அது காட்டுப்பூனை என தெரியவந்தது. இதுகுறித்து பொதுமக்களிடம் அவர்கள் விளக்கி கூறினர். இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து சிறுத்தை குறித்த அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன காப்பாளர்கள் வேப்பூர் சுற்றுவட்டார காப்புக்காடுகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் வேப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வேப்பூர் அருகே பரபரப்பு காப்புக்காட்டில் சிறுத்தை நடமாட்டம்? appeared first on Dinakaran.

Read Entire Article