வேப்பங்கொட்டையில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்! : தொழில் முனைவோர்: அட்சயா கார்த்திக்!!!

1 month ago 9

Neem,karthikசாலை ஓரங்களிலும், வேலிகள் மற்றும் வாய்க்கால் வரப்பு ஓரங்களிலும் வேப்ப மரங்களை நாம் நிறைய பார்த்திருப்போம். ஆனால் அவற்றில் இத்தனை பயன்பாடு இருக்கிறதா? அது இவ்வளவு வளம் கொழிக்கும் தொழில் வாய்ப்புகள் கொண்டுள்ளதா என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும். இந்த வேப்பங்கொட்டைகளில் இருந்து வேப்ப எண்ணெய், வேப்பம் புண்ணாக்கு, வேப்பம் பவுடர் வகைகளை தயாரித்து விற்பனை செய்து வரும் ஈரோட்டினை சேர்ந்த அட்சயா மற்றும் கார்த்திக் சௌந்தரராஜன் இருவரும் இத்தொழிலின் நன்மைகள் அதற்கான வேலை வாய்ப்புகள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.சாலையோரம் உதிர்ந்து கேட்பாரற்று விழுந்து கிடைக்கும் வேப்பங்கொட்டைகளில் இவ்வளவு விஷயங்கள் உள்ளதா? என பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் உண்மை தான் என்கிறார் அட்சயா மற்றும் கார்த்திக். நான் இந்த தொழிலுக்கு வரும் முன்பு இது குறித்த தகவல்கள் ஏதுமே எனக்கு அறிமுகமில்லை தான். நான் வேலையில் சேர்ந்த கம்பெனி ஒன்றில் வேப்பங்கொட்டைகளில் இருந்து எண்ணெய் எடுத்து விற்பனை செய்யும் விதங்களையும் அதன் முழு நன்மைகளையும் அறிந்து கொண்டேன். அங்கு ஆறு வருடங்களாக கிடைத்த தொழில் அனுபவங்களை கொண்டு தான் தனியாக முழுநேர தொழிலாக இத்தொழிலை செய்ய துணிந்து இறங்கினோம் என்கிறார் அட்சயா.

வேப்பங்கொட்டைகளில் இருந்து எண்ணெய் எவ்வளவு கிடைக்கும்?

சுமார் ஐம்பது கிலோ தரமான வேப்பங்கொட்டைகளில் இருந்து பதினைந்து கிலோ வேப்ப எண்ணெய் வரை எடுக்க முடியும். அதிலிருந்து இருபத்தி ஐந்து கிலோ வரை வேப்பம் புண்ணாக்கு கிடைக்கும். மேலும் அதன் சக்கைகளிலிருந்து சில கிலோக்கள் இரண்டாம் தர புண்ணாக்குகளையும் பெற இயலும். மேலும் உயர்ந்த தரமான வெள்ளை வேப்பங்கொட்டைகளில் பருப்புகளை பிரித்தெடுத்து வேப்பம் பவுடர்களை தயாரித்து விற்பனை செய்யலாம். இந்த வேப்பம்
பவுடர்கள் கணிசமான அளவிற்கு அதிக விலைக்கு போகும். வேப்பம் கொட்டை வியாபாரத்தை பொறுத்த வரை வேஸ்டேஜ் என்பதே கிடையாது. அனைத்துமே பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விடலாம் என்பது தான் இத்தொழிலின் தனி சிறப்பு. ஆனால் இத்தொழில் குறித்து நிறைய பேர் அறிந்திருக்கவில்லை என்பது வருத்தமான ஒன்று தான்.

இந்த வேப்ப எண்ணெய் மற்றும் பவுடர்களுக்கான விற்பனை வாய்ப்பு எப்படி இருக்கும்?

ஒரு கிலோ தரமான வேப்ப எண்ணெய் கிலோவிற்கு 300 முதல் 450 வரை விலை போகிறது. முதல் தர வேப்பம் புண்ணாக்கு கிலோவிற்கு 45 ரூபாய் வரையும் மற்றும் இரண்டாம் தர வேப்பம் புண்ணாக்கு கிலோவிற்கு 30 ரூபாய் வரையிலும் நல்ல விலைக்கு போகிறது. வேப்பம் பவுடர் தயாரிப்பது என்பது கடினமான ஒன்று தான். ஆனால் தரமான பருப்புகளை பயன்படுத்தி தயாரிக்கும் போது நல்ல பலனைத் தரும். இதற்கு டன் கணக்கில் வெள்ளை வேப்பங்கொட்டைகளை பயன்படுத்த வேண்டியிருக்கும். இவை கிலோ 70 ரூபாய் முதல் எண்பது ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தயாரிப்பு பணிகளும் கடினமான ஒன்று தான். ஆனால் பவுடரின் தரம் பொறுத்து கிலோவிற்கு 50000 முதல் லட்சம் வரை விலை போகக்கூடியது. ஆனால் இவற்றின் விற்பனை என்பது நல்ல லாபத்தை தரக்கூடியது தான்.

இவற்றின் பயன்பாடுகள் என்ன?

பொதுவாக வேப்பக்கொட்டைகள் மருத்துவ குணங்கள் வாய்ந்தவை தான். இயற்கை விவசாய முறைகளில் நிறைய பயன்பாட்டில் இருப்பது வேப்ப எண்ணெய் மற்றும் வேப்பம் புண்ணாக்கு வகைகளும் தான். வேப்ப எண்ணெய் மிகச்சிறந்த இயற்கையான பூச்சிக் கொல்லி மருந்தாக செயல்படுகிறது. இவை விவசாயத்தில் ஏராளமான பயன்களை தரக்கூடியது. மேலும் வேப்ப எண்ணெயை சித்த மருத்துவத்திலும் பயன்படுத்தி வருகிறார்கள். சோப்புகள் , கிளினீங் ஏஜெண்டுகள் தயாரிக்க வேப்ப எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகிறது. வேப்ப எண்ணெய் ஒரே முறை ஒரு சொட்டு உட்கொண்டால் போதும் வயிறு சுத்தமாகி விடும். ஆறு மாதங்கள் வரை வயிறு சுத்தமாக இருக்கும். ஆடு
மாடுகளான வீட்டு விலங்குகளுக்கு ஏதேனும் அடிப்பட்ட காயங்கள் இருந்தால் வேப்ப எண்ணெய் பயன்படுத்தினால் குணமாகி விடுகிறது. மனிதர்களின் கைகால், உடல் வலிகளுக்கு வேப்ப எண்ணெய் பயன்படுத்தும் பழக்கம் இன்றளவும் கிராமங்களில் இருந்து வருகிறது. வேப்பம் பவுடர்களை வேப்ப எண்ணெய் தயாரிக்கும் முறைகளின் போது பயன்படுத்தினால் வேப்ப எண்ணெயின் அடர்த்தி மற்றும் தரம் மிக உயர்ந்ததாக இருக்கும். அதனால் அந்த எண்ணெய்கள் நல்ல விலை போகக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

இந்த வேப்பம் பொருட் களுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

வேப்பம் பொருட்களின் தயாரிப்புகளுக்கான விற்பனை மற்றும் பயன்பாடு இந்தியா முழுவதும் அதிகமாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தினை பொருத்தவரை 30 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பது வருத்தமான ஒன்று. இது குறித்த விழிப்புணர்வு சக மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா ,கேரளாவில் அதிகமாக இருப்பதால் அங்கெல்லாம் 80 சதவீத பயன்பாடு இருக்கிறது. தமிழகத்தில் சில இடங்களில் மட்டுமே வேப்பம் பொருட்களுக்கான தேவைகள் மற்றும் விற்பனை இருக்கிறது என்பதே எதார்த்தம். தமிழகத்தில் ஈரோடு, திருச்செங்கோடு, நாகர்கோவில், கரூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், ராஜபாளையம் போன்ற பகுதிகளில் வேப்பம் பொருட்களுக்கான விற்பனை நன்கு இருக்கிறது. இதன் தேவைகள் புரிந்து இங்கெல்லாம் அதிக வேப்பமரங்களை நட்டு பராமரித்து வருகிறார்கள். அப்பகுதிகளில் நிறைய கம்பெனிகள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொழிலுக்கான விற்பனை வாய்ப்புகள் எப்படி கிடைக்கிறது?

விவசாயம் அதிகம் நடைபெறும் இடங்களில் உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகள் தயாரிக்கும் பகுதிகளில் அதிகம் விற்பனை வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் பொருட்களுக்கான விற்பனை வாய்ப்புகள் மிக நன்றாகவே இருக்கிறது. இந்த பொருட்களுக்கான தேவைகள் இந்தியா முழுவதும் இருக்கின்றது. எனக்கு தெரிந்த கம்பெனி ஒன்று வெளிநாட்டிற்கு கூட வேப்பம் பொருட்களை அனுப்புகின்றது. இன்னும் தமிழ்நாட்டில் இந்த வேப்பம் பொருட்களுக்கான பயன்பாடுகள் மற்றும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினால் இத்தொழிலுக்கான விற்பனை வாய்ப்புகளும் இன்னமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொழில் துவங்க என்ன தேவை?

இத்தொழில் துவங்குவது மிக எளிது. இத்தொழில் ஜீரோ வேஸ்டேஜ் என்பதால் அனைவரும் துணிந்து இறங்கலாம். சாதாரணமாக வேப்பங்கொட்டை முப்பது ரூபாய்க்கு கிடைக்கின்றது. சிறிய முதலீட்டில் அதிக லாபத்தை பார்க்கலாம். வேப்பங்கொட்டைகளை வாங்கி விற்பது, வேப்ப எண்ணெய்களை வாங்கி விற்பது, அதனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக தயாரித்து விற்பனை செய்வது என பலவற்றிலும் லாபம் பார்க்கலாம். ஆண்கள் பெண்கள் என அனைவருமே இத்தொழிலில் துணிந்து இறங்கலாம். வருங்காலத்தில் இப் பொருட்களுக்கான தேவைகள் இன்னும் அதிகரிக்கும். தற்போது போட்டிகள் குறைவாக உள்ள இத்தொழிலில் இறங்கி நல்ல லாபம் சம்பாதிக்க இயலும். நமது இயற்கை நமக்கு அளிக்கும் கொடைகளில் சிறந்தது இந்த வேப்பங்கொட்டைகள் இதனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம் என்கிறார் அட்சயா மற்றும் கார்த்திக்.

The post வேப்பங்கொட்டையில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்! : தொழில் முனைவோர்: அட்சயா கார்த்திக்!!! appeared first on Dinakaran.

Read Entire Article