வேட்டைத் தடுப்புக் காவலர்களை மீண்டும் வனத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

3 hours ago 2

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கை எண். 188-ல், அனைத்து நீர்வளங்களையும், வனம் உள்ளிட்ட இயற்கை வளங்களையும் பாதுகாக்கவும், கண்காணிக்கவும், அவை தொடர்பாக அரசின் சார்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 75,000 இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவர். இவர்களில் 30 ஆயிரம் இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், தேர்தல் அறிக்கை எண். 153-ல், அரசுத் துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது குறித்துப் பரிசிலிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்காணும் வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணான வகையில் தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், உள்ளாட்சி அமைப்புகளில் நேரடியாக பணிபுரிந்து கொண்டு வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் தனியார் நிறுவன ஒப்பந்தப் பணியாளர்களாக மாற்றப்பட்டுவிட்டனர். அந்த வரிசையில் தற்போது வனத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான வேட்டைத் தடுப்பு காவலர்களை தனியார் நிறுவன ஒப்பந்தப் பணியாளர்களாக மாற்றியுள்ளது தி.மு.க. அரசு.

அதாவது, ஒப்பந்த அடிப்படையிலான பணி என்றாலும், அரசிடம் இருந்து ஊதியம் பெற்று வந்த வேட்டைத் தடுப்பு காவலர்கள் தனியார் நிறுவனத்திடமிருந்து ஊதியம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள். இதன்மூலம் வனத் துறைக்கும், வனத் துறையில் பணியாற்றி வரும் வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறி, அவர்களுடைய பணி நிரந்தரக் கோரிக்கையை நிராகரிப்பதற்காக இத்தகைய முடிவினை தி.மு.க. அரசு எடுத்துள்ளது.

இதுபோன்ற தொழிலாளர் விரோத தி.மு.க. அரசின் நடவடிக்கை, அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிவாளர்களின் அடிப்படைக் கோரிக்கைக்கே வேட்டு வைத்திருக்கிறது. இது இருக்கின்ற சலுகையை பறிக்கும் செயலாகும். இதன்மூலம், அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் ஒப்பந்தப் பணியாளர்களே இல்லை என்று சொல்லி, தி.மு.க.வின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டதாக தி.மு.க அரசு விளம்பரப்படுத்திக் கொண்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இதுதான் திராவிட மாடல் அரசு. அதாவது பொதுமக்களை ஏமாற்றுகின்ற அரசு.

காடுகளைப் பாதுகாக்கும் வகையில், வன விலங்குகள் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதைத் தடுத்தல், வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்தல், மக்கள் இருக்கும் இடங்களுக்கு வரும் விலங்குகளை வனப் பகுதிக்கு திருப்பி அனுப்புதல் போன்ற முக்கியமானப் பணிகளை வேட்டை தடுப்புக் காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், சட்ட விரோதச் செயல்கள் நடப்பதற்கான வாய்ப்பு உருவாகும். தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த முறையில் பணியமர்த்தியுள்ள தங்களை மீண்டும் வனத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வலியுறுத்தி வேட்டைத் தடுப்புக் காவலர்கள் கோவை, தலைமை வனப் பாதுகாவலரிடம் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முதல்-அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, வனத் துறையில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான வேட்டைத் தடுப்புக் காவலர்களை மீண்டும் வனத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், தேர்தல் வாக்குறுதியின்படி அவர்களை பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணர் திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வனத் துறையின் கட்டுப்பாட்டில் பணியாற்றி வந்த வேட்டைத் தடுப்பு காவலர்களை தனியார் நிறுவனக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ள தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம். pic.twitter.com/eSoTqJyBmC

— O Panneerselvam (@OfficeOfOPS) November 23, 2024

Read Entire Article