வேங்கைவயல் விவகாரம்: கோர்ட்டுகளை அரசியல் மேடையாக்க வேண்டாம் - ஐகோர்ட்டு மதுரைக்கிளை

1 week ago 3

மதுரை,

வேங்கைவயல் விவகாரத்தில் அறிவியல்பூர்வமான சோதனைக்கு பின்னரே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

முன்னதாக குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜரானார். அவர், வேங்கை வயல் வழக்கு குறித்த முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். தொடர்ந்து பேசிய அவர், 389 சாட்சிகளிடம் விசாரித்து 196 செல்போன்கள் பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறினார்.

31 நபர்களிடம் டி.என்.ஏ .பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாகவும், புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்கள் நிபுணர் குழுக்களால் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஜின்னா தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நபர்களிடம் குரல் மாதிரிகள் எடுக்கப்பட்டு அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதுடன், வாட்ஸ் ஆப் ஆடியோக்கள் அனைத்தும் உண்மையானது என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் வேங்கை வயல் விவகாரம் சாதிய மோதல் அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இருவருக்குள்ளே ஏற்பட்ட தனி மனித பிரச்சினையே இது போன்று நடந்துள்ளது என்றும் கூறி இருந்தார்.

இதனைத்தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறும் வரை அதில் எந்தவிதமான கழிவுகளும் கலக்கவில்லை என்பதும் கழிவு கலக்கப்பட்ட நீர் யாருக்கும் விநியோகம் செய்யப்படவில்லை என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து, மனுதாரர் வழக்கை வாபஸ் பெறுவதற்காக இன்று (புதன்கிழமை) வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் கோர்ட்டுகளை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

முன்னதாக திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளை அமர்வில் தாக்கல் செய்திருந்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. விசாரணையில் முன்னேற்றமும் இல்லை. எனவே, வேங்கைவயல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "வேங்கைவயல் விவகாரத்தில் கோர்ட்டுகளை அரசியல் மேடையாக்க வேண்டாம். அறிவியல் பூர்வமான விசாரணை நடத்தப்பட்டு, உரிய ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை அரசுத் தரப்பால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் இல்லையெனில் அதற்கான ஆவணங்களை சமர்பிக்கலாம். இனி போராட்டம் நடத்துவது தேவையற்றது" என்று கூறி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்

Read Entire Article