இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் இன்று தொடக்கம்

4 hours ago 1

கொழும்பு,

இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு தங்களை சிறந்த முறையில் தயார்படுத்துவதற்கு இந்த தொடரை ஆஸ்திரேலியா சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும். கேப்டன் ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், லபுஸ்சேன், அலெக்ஸ் கேரி, மேட் ஷார்ட், சீன் அப்போட், நாதன் எலிஸ், மிட்செல் ஸ்டார்க் என்று ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள்.

இலங்கை அணி இந்த முறை சாம்பியன்ஸ் போட்டிக்கு தகுதி பெறவில்லை. இருப்பினும் டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க தீவிரம் காட்டுவார்கள். சாரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியில் பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், ஹசரங்கா, காமிந்து மென்டிஸ், அவிஷ்கா பெர்னாண்டோ, தீக்ஷனா, வெல்லாலகே உள்ளிட்ட திறமையான வீரர்கள் உள்ளனர். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 103 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 64-ல் ஆஸ்திரேலியாவும், 35-ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. 4 ஆட்டத்தில் முடிவில்லை. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ்5 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.  

Read Entire Article