மதுரை : வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம் என்று நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார். திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. விசாரணையில் முன்னேற்றமும் இல்லை. எனவே, வேங்கைவயல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க வேண்டாம்.அறிவியல் பூர்வமான விசாரணை நடத்தப்பட்டு, உரிய ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை அரசுத் தரப்பால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் இல்லையெனில் அதற்கான ஆவணங்களை சமர்பிக்கலாம். இனி போராட்டம் நடத்துவது தேவையற்றது” எனக்கூறி வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
The post வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம் : நீதிபதி காட்டம் appeared first on Dinakaran.