![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/28/36191194-chennai-06.webp)
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் புலன்விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர். இதில் வேங்கைவயலை சேர்ந்த போலீஸ்காரர் முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை சேர்ந்தவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து இந்த வழக்கை புதுக்கோட்டை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-2-க்கு மாற்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டு நீதிபதி (பொறுப்பு) வசந்தியிடம் வலியுறுத்தினார். மேலும் இதற்கான கடிதத்தை சி.பி.சி.ஐ.டி. தரப்பில் வழங்கப்பட்டது. இதையடுத்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக நீதிபதி தெரிவித்தார்.