வேங்கைவயல் வழக்கு: 3 பேருக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவு

15 hours ago 2

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி அசுத்தம் கலக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இவ்வழக்கில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த காவலர் முரளிராஜா, சுதர்சன், முத்துராஜா ஆகிய 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்ததில் தொடர்பு இருப்பதாக அறிவியல் பூர்வமாக ஆதாரங்களை திரட்டி, தாக்கல் செய்தனர். இதையடுத்து 3 பேர் மீதும் சிபிசிஐடி காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிக்கையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு வன்கொடுமை சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் இருந்த நிலையில், வழக்கில் வன்கொடுமை சட்டப்பிரிவு இல்லாததை சுட்டிக்காட்டி நீதித்துறை நடுவர் கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டது. மேலும் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் கோர்ட்டு அறிவித்தது.

இந்த நிலையில், வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள 3 பேரையும் இன்று (செவ்வாய் கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் கோர்ட்டு உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து காவலர் முரளி ராஜ், முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகிய 3 பேருக்கும் சிபிசிஐடி போலீசார் வேங்கைவயல் கிராமத்திற்குச் சென்று சம்மன் வழங்கினர். அவர்கள் வீட்டில் இல்லாத நிலையில் அவர்களது குடும்பத்தினரிடம் சம்மன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகியோர் விசாரணைக்காக புதுக்கோட்டை நடுவர் கோர்ட்டில் இன்று ஆஜராக வந்தனர். ஆனால் இன்று நீதித்துறை நடுவர் கோர்ட்டு 1 விடுமுறை என்பதால் புதுக்கோட்டை உரிமையியல் கோர்ட்டில் இவ்வழக்கு பட்டியலிடப்பட்டது. அப்போது நீதிபதி பூர்ணிமா முன் மூவரும் ஆஜராகினர்.

அவர்கள் தங்களது வழக்கறிஞர்கள் மூலமாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து மூன்று பேருக்கும் தலா இரண்டு பேர் என மொத்தம் 6 பேர் தனிநபர் ஜாமீன் உத்தரவாதம் அளித்தனர். இதனால் மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Read Entire Article