இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) 2வது ராக்டெட் ஏவுதளத்தை குலசேகரன்பட்டினத்தில் அமைப்பதற்காக கடந்தாண்டு தூத்துக்குடியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனால் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் அமைந்துள்ள இந்த சிறிய ஊர், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. உலகில் 10 நாடுகளில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் உள்ளது. செயற்கை கோள் பயன்படுத்த விரும்பும் நாடுகள் ராக்கெட் ஏவுவதற்கு மற்றொரு நாட்டைச் சார்ந்தே இருக்கிறது.
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அமெரிக்கா, ரஷ்யா, சீனா என வல்லரசு நாடுகள் மட்டுமே ராக்கெட் மூலம் செயற்கை கோள்களை செலுத்தி வந்தது ஒரு காலம். அந்நிலையை மாற்றி அமைத்தது இந்தியாவின் இஸ்ரோ. நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்கு பயன்படும் செயற்கைக்கோள்கள், பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட் உதவியுடன் செலுத்தப்பட்டு, புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்படுகின்றன.
மற்ற நாடுகளை விட, இந்தியாவில் குறைந்த செலவில் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுவதால் பல நாடுகளும், இஸ்ரோ வாயிலாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றன. ஏற்கனவே, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் ஏவுதளம் உள்ளது. அங்கிருந்துதான் தற்போது ராக்கெட்கள் ஏவப்படுகின்றன. குலசேகரப்பட்டினத்தில் அமைய இருப்பது நாட்டின் 2வது ராக்கெட் ஏவுதளம். என்றாலும், ஸ்ரீஹரிகோட்டாவைவிட குலசேகரப்பட்டினம்தான் ராக்கெட் ஏவுவதற்கு பொருத்தமான இடம்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குள்ள 2 ஏவுதள மையங்களிலிருந்துதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, போன்ற ராக்கெட்டுகளின் உதவியோடு பல செயற்கைக்கோள்கள் இங்கிருந்து விண்ணில் ஏவப்படுகின்றன. சீனா, அமெரிக்கா, ரஷ்யாவில் ஏற்கனவே 3 ஏவுதளங்கள் இருக்கும் நிலையில் தற்போதுதான் நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டிருக்கிறது.
அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம். இதற்காக 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நூறு சதவீதம் நிறைவடைந்து விட்டதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார்.
குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதும், அங்கிருந்து முதலில் வளிமண்டலத்தை ஆய்வு செய்ய ரோகிணி 6 H 200 சிறிய வகை ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அனைரும் கைதட்டி உற்சாகமாக கொண்டாடினர். இஸ்ரோ திட்டமிட்டிருந்தபடி, அந்த ராக்கெட் 75.24 கி.மீ உயரத்தை எட்டி 121.42 கி.மீ தூரம் சென்று கடலில் விழுந்தது.
2026ம் ஆண்டு இறுதிக்குள் அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏவுதளத்திற்கு அருகில் விண்வெளி தொழில் பூங்காவைத் தொடங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. வருவாய்த்துறையினர் இஸ்ரோ விஞ்ஞானிகள் கொடுத்த வரைபடத்தின் அடிப்படையில் உடன்குடி யூனியனுக்குட்பட்ட மாதவன்குறிச்சி, சாத்தான்குளம் யூனியனுக்குட்பட்ட பள்ளக்குறிச்சி, படுக்கப்பத்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் மரங்கள், வீடுகள், வழிபாட்டு தலங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அரசுக்கு சமர்பிக்கப்பட்டு சுமார் 2,233 ஏக்கர் நிலம் கையக்கப்படுத்தப்பட்டும் விட்டது.
நிலம் கையகப்படுத்தப்பட்டதற்குரிய இழப்பீடு பணமும் உரிய நபர்களின் வங்கிகணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரோ சார்பில் அறிவிப்பு பலகை தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் எழுதி வைத்துள்ளனர். அதில் இந்த இடம் இந்திய விண்வெளி துறையின் இஸ்ரோவிற்கு சொந்தமானது அத்துமீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என எழுதி வைத்துள்ளனர். தொடர்ந்து அளவீடு செய்யப்பட்ட இடங்களில் யாரும் உள்ளே செல்லாத வண்ணம் கம்பி வேலி அமைத்துள்ளனர்.
ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள கடற்கரை பகுதியில் தற்போது மூன்று கேட்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் கடற்கரை வரை வாகனங்கள் சென்று வர ஏதுவாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. உள் கட்டமைப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. குலசேகரன்பட்டினத்தில் புதிய ஏவுதளம் அமைப்பதன் மூலம் நேடியாக 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும், 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் முதற்கட்டமாக கிடைக்கும். தொடர்ந்து பல்லாயிரம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
அதனைச் சார்ந்த தொழில்கள், ஏரோ நாட்டிக்கல் தொழிற்கூடம் அமையும். தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். உடன்குடி, திருச்செந்தூர், நாசரேத், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், திசையன்விளை என பல பகுதிகளில் தொழில்கள் பெருகும். இதன் மூலம் மக்களின் பொருளாதாரம் உயரும். அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன் மணப்பாடு, குலசேகரன்பட்டினம் பகுதிகள் சுற்றுலாத்தலமாக மாறும். திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மேலும் பிரசித்தி பெற்று சர்வதேச அளவில் பேசப்படும். உலக நாடுகளில் கவனத்தை இந்த பகுதி பெறும்.
குலசேகரன்பட்டினம் உலக விண்வெளி அறிவியல் வரைபடத்தில் முக்கிய இடம் பெறும். குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. போன்ற சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதே இஸ்ரோவின் திட்டம். சிறிய ரக ராக்கெட் பாகங்களை உருவாக்குவதும், ஒன்று சேர்த்து ஏவுவதும் எளிதானது என்பதால் அத்தகைய சிறிய ராக்கெட்டுகளுக்கான ஒரு சிறப்பு விண்வெளி ஆய்வு மையம் அமைப்பது மிகவும் முக்கியம்.
இதன்மூலம் பெரிய ராக்கெட் தயாரிப்புக்கு நீண்ட காலம் காத்திருக்காமல் தேவைக்கு ஏற்ப உடனுக்குடன் சிறிய ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். இது வர்த்தக ரீதியாக மிகப்பெரிய லாபம் அளிக்கும். 2026ம் ஆண்டு இறுதிக்குள் இங்கு பணிகள் முழுமை பெற்று முதல் ராக்கெட் விண்ணில் சீறிப்பாயும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளது ஒரு புது நம்பிக்கையை தந்துள்ளது.
* அந்நிய செலாவணி பெருகும்
ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரன்பட்டினத்தில் இருந்து விண்ணில் செலுத்த 10ல் ஒரு பங்கு செலவே ஆகும். பொருளாதாரம், நேரம் பெரும் சேமிப்பாகிறது. இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரன்பட்டினம் உள்ளது. இத்தளத்திலிருந்து ராக்கெட் ஏவுவதால் நேர விரயம் தவிர்க்கப்படுவதோடு செலவினங்களும், எரிபொருளும் குறையும். மேலும் பல்வேறு நாடுகளின் செயற்கை கோள்களை இங்கிருந்து விண்ணில் செலுத்த வாய்ப்புள்ளதால் நாட்டிற்கு அந்நிய செலாவணி பெருமளவில் கிடைக்கும். ஒரு வருடத்தில் இத்தளம் மூலமாக 24 ராக்கெட்களை ஏவ முடியும். மேலும் ராக்கெட் சார்ந்த புதிய தொழில் வாய்ப்புகள் பெருகும்.
* கட்டுப்பாடுகள் குறையும்
குலசேகரன்பட்டினத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகளால் இந்த பகுதி மக்களுக்கோ, மீனவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும் தொழிற்பாதுகாப்பு படையினர், ராணுவத்தினர் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும் என மக்கள் மத்தியில் சிலர் பீதியை கிளப்புகின்றனர். ஸ்ரீஹரிகோட்டாவில் தான் அதிகளவில் பாதுகாப்பு இருக்கும் குலசேகரன்பட்டினத்தில் இருக்காது.
ஏனெனில், ராக்கெட் குறிப்பிட்ட இலக்கை விரைவில் அடைந்து விடும். அந்த சில மணி நேரங்கள் மட்டுமே பொதுமக்களின் பாதுகாப்புக்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். வழக்கம் போல் சாதாரணமாக விமான நிலையம், தெர்மல் உள்ளிட்ட பகுதியில் எவ்வளவு பாதுகாப்பு உள்ளதோ அதே போன்று தான் பாதுகாப்பு இருக்குமே தவிர கடும் கட்டுப்பாடுகள் ஏதும் இருக்காதாம்.
* குலசேகரன்பட்டினத்தை இஸ்ரோ தேர்வு செய்தது ஏன்?
தமிழ்நாட்டில் இருந்து ராக்கெட்டை ஏவுவதால் இஸ்ரோவுக்கு என்ன லாபம் என்பது குறித்து இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது: கடந்த 1960ம் ஆண்டு இறுதியில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க தமிழ்நாடுதான் முதலில் கருத்தில் கொள்ளப்பட்டது. இதற்காக கீழக்கரை, சாயல்குடிக்கு அருகில் இருக்கும் வாலிநோக்கம் என்ற இடத்தில் ஏவுதளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது இஸ்ரோ தலைவராக இருந்த சதீஷ் தவான் தலைமையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்பட பலர் அடங்கிய குழு அங்கு சென்று ஆய்வு செய்தது. ஆனால், சில காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதற்குப் பிறகுதான் ஸ்ரீஹரிகோட்டா தேர்வு செய்யப்பட்டு அங்கு விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. அதேவேளையில் தற்போது நாட்டிற்கு இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டியது முக்கியம் என்று உணர்ந்த இஸ்ரோ, தூத்துக்குடியில் உள்ள குலசேகரன்பட்டினத்தை தேர்ந்தெடுத்துள்ளது. பொதுவாக ஒரு ராக்கெட் ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்திருக்க வேண்டும்.
ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் விண்கலங்கள் தென் துருவத்தை நோக்கி, கிழக்கு கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு பகுதியிலிருந்து ஏவப்பட வேண்டும். அப்போதுதான் பூமியின் சுழல் வேகமான 0.5 கிமீ/செகண்ட் கூடுதலாக கிடைக்கும் (நமக்கு தேவை 8 கி.மீ/செகண்ட்). இவ்வாறு ஏவப்படும்போது ஒரு ராக்கெட்டின் முழு ஆற்றலும் பயன்படுத்தப்படும் என்பதால் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைக் கூட எளிதாக ஏவ முடியும்.
இந்தக் காரணத்திற்காகவே பல நாடுகள் வேறு கண்டங்களில் இருந்துகூட தங்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகின்றன. எடுத்துக்காட்டாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்கலங்கள் தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானா ஏவுதளத்திலிருந்து ஏவப்படுகின்றன. ஏவுகலன்களில் இருந்து பிரிந்து வரும் பாகங்கள் (சில பாகங்கள் ஏறக்குறைய 20 மீட்டர் நீளமும் 3 மீட்டர் விட்டமும் கொண்டவை) கடலில்தான் விழ வேண்டுமே தவிர மக்கள் வசிக்கும் நிலபரப்பின் மீது விழக்கூடாது. அப்படி விழுந்தால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
இதைகருத்தில் கொண்டு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளின் பாகங்கள் இலங்கை நாட்டின் மீது விழுந்து விடக்கூடாது என்பதால் ராக்கெட்டுகள் ‘Dogleg maneuver’ எனும் முறையில் விண்ணில் ஏவப்படுகின்றன. ஆனால், இந்த முறையில் ஏவும்போது எரிபொருள் அதிகமாக செலவாகும். எனவே, புதிய ஏவுதளம் இலங்கை நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், எரிபொருளையும், செலவுகளையும் மிச்சப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, ஏவுதளம் அமைக்கப்படும் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீட்டருக்கும் குறைவாக இருக்க வேண்டும் . மேலும், அந்தப் பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடிய பகுதியாக இருக்கக்கூடாது. புயல், மின்னல், மழையின் தாக்கம் அங்கு குறைவாக இருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரன்பட்டினம், இந்த அனைத்து அம்சங்களையும் கொண்ட ஓர் இடமாக உள்ளது. எனவே தான் இஸ்ரோ இந்த இடத்தை தேர்வு செய்துள்ளது.
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் இஞ்ஜினின் எரிபொருளான திரவ ஹைட்ரஜனும் கேரள மாநிலம் தும்பாவில் ராக்கெட் பாகங்கள் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன. அங்கிருந்து வெகு தொலைவில், ஆந்திராவில் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அவற்றைக் கொண்டு செல்வதில் கால தாமதம், பாதுகாப்பு பிரச்னை, கூடுதல் செலவு, சேதம் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஆனால், மகேந்திரகிரி மற்றும் தும்பாவுக்கு அருகில் குலசேகரன்பட்டினம் இருப்பதால் இந்த பிரச்னைகள் ஏற்படாது. இவ்வாறு அந்த விஞ்ஞானி கூறினார்.
* 50 ஆண்டு கனவு நனவாகிறது
ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்துக்கு ராக்கெட் ஏவுதளம் வந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கான வாய்ப்பு வந்தும் கைநழுவிப் போனது சோகம். 1960-களில் சாதகமான நில அமைப்பும் தட்பவெப்பமும் கொண்ட தமிழகத்தின் தென்பகுதியில்தான் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க ‘விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் கமிட்டி’ திட்டமிட்டது. இந்தக் கமிட்டிதான் பின்னர் 1969-ல் இஸ்ரோ-வாக உருவானது. அப்போது என்ன நடந்தது என்பதை இஸ்ரோவில் பணியாற்றிய மூத்த விஞ்ஞானி நம்பிநாராயணன் தனது ‘Ready to Fire’என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
* வேகம் கூடும்
ஸ்ரீஹரிகோட்டா, பூமத்திய ரேகை பகுதியிலிருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்துள்ளது. ஆனால், குலசேகரன்பட்டினம் 8.36 டிகிரி வடக்கில் உள்ளது. எனவே, குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவும்போது அதிகளவில் எரிபொருள் மிச்சமாகும். அதோடு, ராக்கெட்டின் வேகத்தை நொடிக்கு அரை கிலோ மீட்டர் வீதம் அதிகரிக்க முடியும்.
The post வேகமாக தயாராகும் நாட்டின் 2வது ஏவுதளம் குலசேகரன்பட்டினத்தில் 2026ல் ராக்கெட் சீறிப்பாயும்! பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் appeared first on Dinakaran.