
கொழும்பு,
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 38.3 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரூதர்போர்டு பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 74 ரன்களுடனும் ரோஸ்டன் சேஸ் 33 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து, மழை காரணமாக டிஎல்எஸ் முறைப்படி 37 ஓவரில் 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலங்கை அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நிஷான் மதுஷ்கா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 69 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் சரித் அசலங்கா சிறப்பாக ஆடி 77 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இறுதியில், இலங்கை 31.5 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் இலங்கை 1-0 என முன்னிலை வகிக்கிறது.