வெவ்வேறு மதத்தினர், வெளிநாட்டினரை மணந்தவர்கள் சிறப்பு சட்டப்படி பதிந்தால் மட்டுமே திருமணம் செல்லும்: கீழமை நீதிமன்ற உத்தரவை ஐகோர்ட் கிளை உறுதி

3 months ago 6


மதுரை: வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டினரை மணந்தவர்கள் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்தால் தான் செல்லும் என்ற கீழமை நீதிமன்ற உத்தரவு ஐகோர்ட் கிளையில் உறுதியானது. மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது திருமணத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், நான் கிறிஸ்தவ மதம், என் மனைவி இந்து மதத்தை சேர்ந்தவர். எங்களுக்கு பெற்றோர் சம்மதத்துடன் 2005ல் திருமணம் நடைபெற்றது. என் மனைவி தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை; பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். எங்கள் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைபெறவில்லை. சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவும் செய்யப்படவில்லை. இதனால், எங்கள் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கணவரின் குற்றச்சாட்டுக்கு மனைவி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் இருவரின் திருமணம் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யாததால் செல்லாது என 2016ல் தீர்ப்பளிக்கப்பட்டது. இதை ரத்து செய்யக் கோரி மனைவி தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்து ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.செந்தில்குமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: இருவரின் திருமண அழைப்பிதழை பார்க்கும்போது, திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது போல் தெரியவில்லை. தம்பதி வெவ்வேறு மதம், மத நம்பிக்கைகளை கொண்டவர்கள். திருமணம் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவும் செய்யவில்லை. இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள் திருமணத்தை பதிவு செய்தால் தான் செல்லுபடியாகும்.

இந்து திருமணச் சட்டத்தின் கீழ் கணவன், மனைவி இருவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர், கிறிஸ்தவர் அல்லது இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டால் அவர்களின் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ்தான் பதிவு செய்ய வேண்டும். இச்சட்டத்தின்படி இத்திருமணத்தை பதிவு செய்யாதால், இவர்களின் திருமணம் செல்லாது. எனவே, விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. அதே நேரம், வெளிநாடுகளை சேர்ந்தவர்களை நம் நாட்டைச் சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்வது தொடர்பான செய்திகள் அடிக்கடி ஊடகங்களில் பார்க்க முடிகிறது.

இந்த திருமணங்களில் இந்திய நாட்டின் திருமணச் சட்டங்களைத் தான் நாம் பின்பற்றவேண்டும். வெளிநாட்டினரை திருமணம் செய்யும்போது, அவர்கள் இந்து மதத்தைச் சேராதவர்கள் என்றால் கண்டிப்பாக சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யவில்லை என்றால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

The post வெவ்வேறு மதத்தினர், வெளிநாட்டினரை மணந்தவர்கள் சிறப்பு சட்டப்படி பதிந்தால் மட்டுமே திருமணம் செல்லும்: கீழமை நீதிமன்ற உத்தரவை ஐகோர்ட் கிளை உறுதி appeared first on Dinakaran.

Read Entire Article