வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ரோகித் சிறந்தவர்.. ஆனால்.. - இந்திய முன்னாள் கேப்டன் அதிருப்தி

6 hours ago 1

மும்பை,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 252 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் கங்குலி, தோனிக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்திய கேப்டனாக சாதனை படைத்தார். அத்துடன் டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐ.சி.சி. கோப்பைகளை வென்ற ஒரே இந்திய கேப்டன் என்ற தோனியின் மகத்தான சாதனையை அவர் சமன் செய்தார்.

இந்நிலையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) ரோகித் சர்மா சிறந்த பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் அசத்துவதாக இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப், பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "4-5 வருடங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் சுமாரான பார்ம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ரோகித் போன்ற நட்சத்திர அந்தஸ்தும் திறமையும் கொண்ட வீரர் தற்போது விளையாடுவதை விட இன்னும் சிறப்பாக விளையாட முடியும். இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரை பற்றி அவர் சிந்தித்துக் கொண்டிருப்பார். அது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த தொடரைப் போலவே கடினமாக இருக்கும். அங்கேயும் ஸ்விங், வேகம் ஆகியவை இருக்கும்.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ரோகித் சிறந்தவர். ஆனால் அவரது தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்தியா அசத்த வேண்டும். ரோகித் சர்மா எப்போதும் சிறந்த கேப்டன். இந்தியாவின் கேப்டனாக செயல்பட்ட என்னால் அவரிடம் தலைமைப் பண்புகள் இருப்பதை பார்க்க முடிகிறது. எனவே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவர் இந்திய அணியை சிறந்த உச்சங்களுக்கு அழைத்து சென்றதில் எனக்கு ஆச்சரியமில்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடுவாரா? என்பது எனக்கு தெரியவில்லை. ஒருவேளை என்னுடைய இந்தப் பேட்டியை ரோகித் பார்த்தால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுப்பாக விளையாடி விஷயங்களை மாற்ற வேண்டும். தற்சமயத்தில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக செயல்படவில்லை. எனவே இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட வழியை கண்டறியுங்கள். ரோகித் சர்மா இந்த இந்திய அணியை இங்கிலாந்தில் வெற்றி பெற வைக்கும் வழியைக் கண்டறிய வேண்டும்" என்று கூறினார்.

Read Entire Article