வாஷிங்டன்: பிரான்ஸ் பயணத்தை தொடர்ந்து அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் இன்று சந்தித்து பேச உள்ளார். இதில், பரபரப்பான உலக அரசியலுக்கு மத்தியில் வர்த்தகம், வரி, விசா மற்றும் சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து டிரம்புடன் பிரதமர் மோடி பேச உள்ளார். பிரதமர் மோடி பிரான்ஸ், அமெரிக்கா நாடுகளுக்கு 3 நாள் அரசு முறை பயணமாக கடந்த 10ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
முதல் கட்டமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றடைந்த அவர், சர்வதேச செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, 14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்றார். இம்மாநாட்டில் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இருதரப்பிலும் பல்வேறு முன்னணி நிறுவன தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சரியான நேரம் இது என அழைப்பு விடுத்தார்.
பயணத்தின் 2ம் நாளான நேற்று பிரான்சின் மாசே நகருக்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள மசார்கஸ் போர் நினைவிடத்தில் உள்ள இந்திய வீரர்களின் கல்லறைகளுக்கு அஞ்சலி செலுத்தினார். முதலாம் மற்றும் 2ம் உலகப் போரில் உயிர் நீத்த வீரர்களின் கல்லறைகள் இந்த நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் காமன்வெல்த் நாடுகளின் படையில் இருந்த இந்திய வீரர்களின் நினைவிடங்களும் மசார்கஸில் அமைக்கப்பட்டுள்ளன. அப்போது பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் அஞ்சலி செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து, மாசே நகரில் இந்தியாவின் புதிய தூதரகத்தை மோடி, மேக்ரான் இருவரும் கூட்டாக திறந்து வைத்தனர். பின்னர், பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை பாரீஸ் திரும்பும் வழியில் விமானத்திலேயே நடந்தது. இதில், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதி அளித்தனர். ஐநா பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட உலக மன்றங்களில் சீர்த்திருத்தம் மேற்கொள்ள வேண்டியது உடனடித் தேவை என இரு தலைவர்களும் விடுத்த கூட்டறிக்கையில் அழுத்தம் தரப்பட்டது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக பிரான்ஸ் முழு ஆதரவு அளிக்கும் என அதிபர் மேக்ரான் உறுதி அளித்தார். இதையடுத்து, பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து புறப்பட்டு அமெரிக்கா சென்றடைந்தார். இன்று மாலை வெள்ளை மாளிகையில் அவர், புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேச உள்ளார். கடந்த மாதம் 20ம் தேதி 2வது முறையாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக வரிகளை அதிகப்படுத்தி உள்ளார்.
இந்தியாவுக்கு என தனியாக எந்த வரியையும் டிரம்ப் விதிக்கவில்லை என்றாலும் எஃகு, அலுமினிய இறக்குமதிகளுக்கு வரியை உயர்த்தி உள்ளார். அமெரிக்காவுக்கு இந்தியா அதிகப்படியான எஃகு, அலுமினியத்தை ஏற்றுமதி செய்கிறது. இதுதவிர, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களை அவரவர் நாடுகளுக்கு நாடு கடத்துவதை டிரம்ப் தீவிரமாக்கி உள்ளார். இதன்படி, சமீபத்தில் 104 இந்தியர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு அமெரிக்க ராணுவ விமானத்தில் கைதிகள் போல் அழைத்து வரப்பட்டனர். இது இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
இந்தியர்களை மோசமாக நடத்தும் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. அடுத்தகட்டமாக மேலும் 148 பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இது முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. மேலும், எச்1பி விசா கட்டுப்பாடு, வர்த்தக பற்றாக்குறை போன்ற விஷயங்களிலும் டிரம்ப் கடும் கெடுபிடி காட்டி வருகிறார். இந்தியா வரிகளின் மன்னன் என அவர் தனது தேர்தல் பிரசாரத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் இன்று சந்திக்க உள்ளது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பில் வர்த்தகம், வரி, விசா, சட்டவிரோத குடியேற்றம் குறித்த விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி விரிவாக பேசுவார் எனத் தெரிகிறது. அதிபர் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் இருந்தே பிரதமர் மோடியுடன் ஆழமான நட்புறவு நீடிக்கிறது. அதனால்தான் கடந்த மாதம் 25ம் தேதி தொலைபேசியில் பிரதமர் மோடி, டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த போது அமெரிக்கா வர அழைப்பு விடுத்தார்.
அதன் பேரில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அதுமட்டுமின்றி, டிரம்பை சமாதானப்படுத்த அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை இந்தியா குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து பிரதமர் மோடி, அதிபர் டிரம்பிடம் விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எச்1பி போன்ற விசாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவும் அவர் டிரம்பிடம் வலியுறுத்துவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், ஆயுத கொள்முதல் உள்ளிட்ட பாதுகாப்பு சம்பந்தமான பேச்சுகளும் மோடி-டிரம்ப் சந்திப்பில் இடம் பெறும் என கூறப்படுகிறது. அதிபர் டிரம்புடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அமெரிக்காவின் முன்னணி தொழில் நிறுவன தலைவர்களை சந்திக்கும் பிரதமர் மோடி, அமெரிக்க வாழ் இந்தியர்களையும் சந்தித்து பேச உள்ளார். அதிபர் டிரம்பின் திடுக்கிடும் உத்தரவுகள் உலக நாடுகளின் பல்வேறு விவகாரங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், பிரதமர் மோடியின் இன்றயை அமெரிக்க பயணம் மிகுவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
* சாவர்க்கருக்கு அஞ்சலி
பிரான்சின் துறைமுக நகரமான மாசேவிற்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு வந்தடைந்ததும் தனது எக்ஸ் தள பதிவில், வீர சாவர்க்கருக்கு அஞ்சலி செலுத்தினார். அப்பதிவில் பிரதமர் மோடி, ‘‘இந்தியாவின் சுதந்திர தேடலில் மாசே நகரம் சிறப்பு வாய்ந்தது. இங்கு தான் வீர சாவர்க்கர் துணிச்சலுடன் தப்பிக்க முயன்றார். அந்த சமயத்தில் சாவர்க்கரை பிரிட்டிஷிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்த மாசே மக்களுக்கும், பிரெஞ்சு ஆர்வலர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வீர சாவர்க்கரின் துணிச்சல் தலைமுறைகள் கடந்து நமக்கு ஊக்கமளிக்கிறது’’ என்றார்.
கடந்த 1910ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி லண்டனில் கைது செய்யப்பட்ட சாவர்க்கர் விசாரணைக்காக மோரியா கப்பல் மூலம் இந்தியாவுக்கு அழைப்பு வரப்பட்டார். அப்போது அக்கப்பல் மாசே துறைமுகத்தில் நின்றபோது சாவர்க்கர் கப்பலின் ஜன்னல் வழியாக கடலில் குதித்து நீந்தி தப்பிக்க முயன்றார். ஆனால் பிரெஞ்சு படையால் அவர் பிடிக்கப்பட்டு மீண்டும் பிரிட்டிஷ் படையிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த சமயத்தில் சாவர்க்கரை ஒப்படைக்க பிரெஞ்சு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின் சாவர்க்கர் அந்தமான் தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
* சுந்தர் பிச்சையுடன் சந்திப்பு
பாரீசில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டை தொடர்ந்து கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியில் கூகுள் நிறுவனம் எவ்வாறு இணைந்து பணியாற்றுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
* வழியனுப்ப வந்த பிரான்ஸ் அதிபர்
பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பாரீஸ் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு பிரதமர் மோடி நேற்றிரவு புறப்பட்டார். அப்போது, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நேரில் விமான நிலையத்திற்கு வந்து பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தார். பிரதமர் மோடி பாரீஸ் வந்தபோதும் அதிபர் மேக்ரான் இரவு விருந்து அளித்து கட்டித் தழுவி வரவேற்றார். வழியனுப்பவும் அவரே நேரில் வந்தது பிரதமர் மோடியுடன் மிகவும் நெருக்கமான நண்பராக இருப்பதை காட்டுவது போல் இருந்தது.
டிரம்ப்பை சந்திக்கும் 4வது உலக தலைவர்
* அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக கடந்த மாதம் 20ம் தேதி பதவியேற்றார். டிரம்பின் 2வது பதவிக்காலத்தில் முதல் முறையாக பிரதமர் மோடி அவரை சந்திக்க உள்ளார்.
* கடந்த 2017 ஜூன் மாதம் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் வெள்ளை மாளிகையில் அவரை முதல் வெளிநாட்டு தலைவராக பிரதமர் மோடி சந்தித்ததார்.
* தற்போது 2வது முறையாக அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு இதுவரை வெள்ளை மாளிகையில் அவரை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோர் சந்தித்துள்ளனர். இப்போது, டிரம்பை சந்திக்கவுள்ள 4வது உலக தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
* கடந்த 2017 மற்றும் 2019ல் 2 முறை பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை தொடர்ந்து 2020 பிப்ரவரியில் டிரம்ப் இந்தியாவுக்கு வந்தார். அதன் பின் கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி இரு தலைவர்களும் தொலைபேசியில் பேசினர். டிரம்ப் 2வது முறையாக அதிபராக பதவியேற்றதற்காக கடந்த மாதம் 25ம் தேதி மோடி தொலைபேசியில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
* வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள அமெரிக்க அதிபரின் விருந்தினர் மாளிகையான பிளேர் ஹவுசில் பிரதமர் மோடி தங்க வைக்கப்பட்டுள்ளார்.
The post வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி-அதிபர் டிரம்ப் இன்று சந்திப்பு: பரபரப்பான உலக அரசியலுக்கு மத்தியில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.