வல்லம்: தஞ்சை தனியார் நிதி நிறுவனத்தில் வெள்ளிக்கு தங்க முலாம் பூசி அடகு வைத்து ரூ.16.31 லட்சம் ேமாசடி செய்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை ரெட்டிபாளையத்தில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, ரெட்டிபாளையம் சாலை காந்திபுரத்தை சேர்ந்த திவ்யா (31), சீனிவாசபுரம் செக்கடியை சேர்ந்த சரஸ்வதி (38) ஆகியோர் வளையல் மற்றும் கைச்செயினை அடகு வைக்க நேற்று வந்தனர். இவர்கள் பலமுறை அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் வாங்கியிருந்தனர். மீண்டும் அதேபோன்று கைச்செயின், வளையலை அடமானம் வைக்க கொண்டு வந்தனர். சந்தேகமடைந்த நிதி நிறுவன அதிகாரி கஜேந்திரன், கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே ஏற்கனவே இவர்கள் அடமானம் வைத்த நகைகளை சோதனை செய்தபோது வெள்ளி நகைகளுக்கு தங்கம் முலாம் பூசி அடகு வைத்தது தெரியவந்தது.
இந்நிலையில் கள்ளப்பெரம்பூர் போலீசார் அடகு கடைக்கு சென்று திவ்யா, சரஸ்வதி ஆகியோரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இவர்களிடம் போலி நகைகளை அடகு வைக்குமாறு அனுப்பி வைத்தது தஞ்சை கீழவாசல் கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்த மணிவண்ணன் (37) என தெரியவந்தது. வீட்டில் இருந்த மணிவண்ணனை நேற்று கைது செய்து விசாரித்தனர். அதில், கும்பகோணம், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து போலி நகைகளை வாங்கி வந்து அடகு வைத்து மணிவண்ணன் இதுவரை ரூ.16.31 லட்சம் மோசடி செய்ததும், மணிவண்ணன் கொடுக்கும் நகையை திவ்யா, சரஸ்வதி ஆகியோர் அடகு வைத்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிந்து மணிவண்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த திவ்யா, சரஸ்வதி ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தஞ்சை சீனிவாசபுரத்தை சேர்ந்த கவிதாவை தேடி வருகின்றனர்.
The post வெள்ளிக்கு தங்க முலாம் பூசி தஞ்சை நிதி நிறுவனத்தில் அடகு வைத்து ரூ.16.31 லட்சம் மோசடி: 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.