வெள்ள சேத ஆய்வுக்கு பிறகு சாத்தனூர் அணையில் மீண்டும் தண்ணீர் திறப்பு

4 weeks ago 5

தண்டராம்பட்டு, டிச.18: வெள்ள சேத ஆய்வுக்கு பிறகு நேற்று சாத்தனூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலேயே சாத்தனூர் அணை தான் மிகப்ெபரியது. இந்த அணையில் 119 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இந்த அணைக்கு அவ்வப்போது பெய்த மழை காரணமாக தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 112 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி மின்சாரம் தயாரிக்கும் வழியாக 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அன்று முதல் சாத்தனூர் அணையில் நீர்வரத்துக்கு ஏற்ப தண்ணீர் படிப்படியாக திறந்து விடப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி இரவு பெஞ்சல் புயல் காரணமாக சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் எனக்கருதி தண்ணீர் செல்லும் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தண்ணீர் திறந்ததால் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றங்கரையோரம் இருந்த மதகுகள், நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் கட்டிடங்கள் என மொத்தம் 255 இடங்களில் சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததால் படிப்படியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

இதையடுத்து, வெள்ளத்தால் சேதமான பகுதிகளை கடந்த 2 நாட்களாக தென்பெண்ணை ஆறு வடிநிலம் கண்காணிப்பு பொறியாளர் தமிழ்ச்செல்வன் ஆய்வு செய்தார். அந்த ஆய்வு காரணமாக அணையில் இருந்து 2 நாட்களுக்கு தண்ணீர் வெளியேற்றுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதற்கிடையில், அணைக்கு 3,055 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் அணையில் 117.40 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி 11 கண் மதகு வழியாக நேற்று பகல் 3 மணி நிலவரப்படி 2,000 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தால் நீர் திறப்பின் அளவு மேலும் அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வெள்ள சேத ஆய்வுக்கு பிறகு சாத்தனூர் அணையில் மீண்டும் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article