வெளிமாநில தேவை அதிகரிப்பால் சாளை மீன்களை பிடிப்பதில் மீனவர்கள் ஆர்வம்

1 week ago 7

ராமநாதபுரம் : மன்னார் வளைகுடா சாளை மீன்களுக்கு வெளிமாநிலங்களில் வரவேற்பு உள்ளதால், அதனை பிடிப்பதில் மீனவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் முதல் தொண்டி, ஏர்வாடி, சாயல்குடி அருகே வாலிநோக்கம், மூக்கையூர், ரோச்மா நகர் வரை 180 கடற்கரை கிராமங்கள் உள்ளன. இங்கு மீன்பிடித்தல் உள்ளிட்ட கடல்சார்ந்த தொழில்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட விசை படகுகள், 2,000க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள், வல்லம் ஆகியவற்றை பயன்படுத்தி கடலுக்குள் சென்று மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட எல்லை வரை உள்ள கடல் பகுதி மன்னார் வளைகுடா ஆகும். இப்பகுதி கடலில் பிடிக்கப்படும் மீன்கள் இயற்கையாகவே தனிச்சுவையுடன் ருசி மிகுந்து காணப்படுவதால் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.

இங்கு ஏப்.15 முதல் 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படுவதால், மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசை படகு ஆழ்கடல் மீன்பிடி நிறுத்தப்பட்டு மீனவர்கள் படகுகளை மீன்பிடி துறைமுகங்களில் கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். ஓய்வு நேரங்களில் படகு, வலை மற்றும் மீன்பிடி சாதனங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது சாளை (மத்தி) மீன் சீசன் உள்ளது. இதனால் சாளை மீன் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் சாளை மீனுக்குரிய பிரத்தியேக வலையை பயன்படுத்தி சுமார் 3 நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு நாட்டு படகுகளில் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

இப்பகுதி சாளை மீன்களுக்கு கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளதால் நாள் தோறும் காலை மாலை நேரங்களில் மீனவர்கள் பிடித்துவரும் மீன்களை பதப்படுத்தி வாகனங்களில் ஏற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதுகுறித்து ரோச்மாநகர் மீனவர்கள் கூறும்போது, தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் ஆழ்கடல் மீன்பிடிக்க செல்வது கிடையாது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 நாட்டிக்கல் மைல் தூரத்தில் சென்று, சாளை மீனுக்குரிய வலை விரித்து அந்த மீன்கள் பிடிக்கப்பட்டு வருகிறது, தற்போது சீசன் என்பதால் வரத்து அதிகமாக உள்ளது. இந்த சாளை மீன் முதல் ரகம், இரண்டாம் ரகம் மூன்றாம் ரகம் என 3 ரகங்களாக பிரிக்கப்படுகிறது.

இதில் முதல் ரகம் மீன்கள் ஒரு கிலோ ரூ.120 முதல் 150 வரையிலும், இரண்டாம் ரகம் ரூ.70 முதல் 80 வரையிலும், மூன்றாம் ரகம் ரூ.40 முதல் 50 வரையிலும் நாட்களுக்கு ஏற்றவாறு விலை போகிறது. இதில் முதல் இரண்டு ரக மீன்கள் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற அருகிலுள்ள மாநிலங்களுக்கு செல்கிறது.

மூன்றாம் ரக மீன்கள் சேதமடைந்து இருக்கும். அதனால் அவை கோழி தீவனம், இயற்கை உரம் தயாரிப்பு போன்ற பயன்பாட்டிற்கு அரவைக்காக நாமக்கல், ஈரோடு, கோவை போன்ற பிற மாவட்டங்களுக்கு செல்கிறது.ரோச்மா நகர் முதல் வாலிநோக்கம் போன்ற சாயல்குடி பகுதிகள், ஏர்வாடி, கீழக்கரை, சேதுக்கரை, முத்துப்பேட்டை, பெரியபட்டிணம் போன்ற கீழக்கரை பகுதிகள்.

மண்டபம், பாம்பன்,தங்கச்சிமடம், ராமேஸ்வரம் போன்ற ராமேஸ்வரம் பகுதிகள், தேவிப்பட்டிணம், எஸ்.பி பட்டிணம், தொண்டி போன்ற தொண்டி பகுதிகள் என மாவட்டம் முழுவதும் இருந்து நாள் ஒன்றிற்கு சுமார் 1,000 டன் மீன்கள் வெளிமாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் சில பகுதிகளுக்கும் செல்கிறது என்றனர்.

The post வெளிமாநில தேவை அதிகரிப்பால் சாளை மீன்களை பிடிப்பதில் மீனவர்கள் ஆர்வம் appeared first on Dinakaran.

Read Entire Article