
புதுடெல்லி,
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தால் நாட்டில் அசாதாரணமான சூழல் நிலவியது. இதனால், 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வாரம் நிறுத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர். இன்னும் 12 லீக் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 4 பிளே-ஆப் சுற்று என மொத்தம் 16 ஆட்டங்களை நடத்த வேண்டி உள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன. இதன் காரணமாக ஐ.பி.எல். போட்டியை மீண்டும் தொடங்க இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையொட்டி ஐ.பி.எல். நிர்வாக குழு உறுப்பினர்களும், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் நேற்று ஆலோசனை நடத்தினர். இதையடுத்து எஞ்சிய ஐ.பி.எல். தொடர் வரும் 16 அல்லது 17ந் தேதிகளில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பிய நிலையில், அவர்கள் எஞ்சிய ஐ.பி.எல். தொடர் தொடங்கினாலும் அதில் கலந்து கொள்வார்களா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐ.பி.எல். தொடர் மீண்டும் தொடங்கினாலும். நாடு திரும்பிய வெளிநாட்டு வீரர்களை வற்புறுத்தி அழைக்கும் எண்ணம் இல்லை என ஐ.பி.எல். நிர்வாகம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.