
புதுடெல்லி,
கடந்த பத்து ஆண்டுகளில், வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் இந்தியா 1,243 கோடி ரூபாய் மதிப்பிலான வருவாயை ஈட்டியுள்ளதாக விண்வெளித் துறையை கவனிக்கும் மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்திருப்பதாவது:-
ஜனவரி 2015 முதல் டிசம்பர் 2024 வரையிலான கடந்த பத்து ஆண்டுகளில், இஸ்ரோவின் PSLV, LVM3 மற்றும் SSLV ஏவுகணை வாகனங்கள் மூலம் மொத்தம் 393 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் மற்றும் மூன்று இந்திய செயற்கைக்கோள்கள் வணிக அடிப்படையில் ஏவப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகள் உட்பட 34 நாடுகளின் செயற்கைக்கோள்களை இந்தியா ஏவியுள்ளது. இதன் மூலம் இந்தியா 1,243 கோடி ரூபாய் (143 மில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான அந்நியச் செலாவணி வருவாயை ஈட்டியுள்ளது.
அமெரிக்கா - 232, இங்கிலாந்து - 83, சிங்கப்பூர் - 19, கனடா - 8 உள்ளிட்ட 393 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இந்தியா ஏவியுள்ளது. தொடர்ச்சியான வெற்றிகரமான பணிகள் மூலம், இந்தியா தற்போது ஒரு பெரிய விண்வெளி சக்தியாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இந்தியா தற்போது விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு தயாராகி வருகிறது. தொடர்ந்து 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் 'பாரதிய அந்தரிக்ஷா நிலையத்தை' அமைப்பதையும், 2040-க்குள் முதல் இந்தியரை சந்திரனுக்கு அனுப்புவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.