வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி காஞ்சிபுரம் வாலிபர் கைது: நாகையில் இருந்து கப்பலில் இலங்கை தப்ப முயன்ற போது சிக்கினார்

4 hours ago 2

நாகப்பட்டினம்: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக காஞ்சிபுரம் வாலிபர் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் பொழிச்சலூர் பிரேம்நகரை சேர்ந்தவர் கிருபாகரன்(37). இவர், தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பலகோடி ரூபாய் வரை மோடி செய்து தலைமறைவானதாக பல்வேறு காவல்நிலையங்களில் வழக்கு உள்ளது. அதே போல் நாகப்பட்டினம் கல்லரைதோட்டம் உப்பளம் சாலையை சேர்ந்த பானுமதி உள்ளிட்ட சிலரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்ததாக நாகப்பட்டினம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது.

இதுதொடர்பாக போலீசார் தலைமறைவான கிருபாகரனை தேடி வந்தனர். மேலும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் மோசடி செய்துள்ளதால் கிருபாகரன் தேடப்படும் குற்றவாளி என போட்டோவுடன் விமான நிலையங்கள், துறைமுகங்களில் போலீசார் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலமாக கிருபாகரன் இலங்கைக்கு தப்பி செல்வதாக நாகப்பட்டினம் குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் நாகப்பட்டினம் துறைமுகத்தில் நேற்றுமுன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கப்பலில் இலங்கை தப்பி செல்வதற்காக வந்த கிருபாகரனை அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்து, நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து கிருபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி காஞ்சிபுரம் வாலிபர் கைது: நாகையில் இருந்து கப்பலில் இலங்கை தப்ப முயன்ற போது சிக்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article