திருவெறும்பூர், மே 13: கூத்தைப்பார் கிராமத்தில் கண்ணுடைய அய்யனார், சாத்தப்பிள்ளை அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயில் அந்த கிராம மக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது. அய்யனார் கோயிலில் சித்திரை மாததேர் திருவிழா நேற்று நடந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி பழமை மாறாமல் தேரோடும் வீதிகளில் பொதுமக்கள் அவர்கள் வீட்டு வாசலில் பசு மாட்டின் சாணத்தில் இருந்து எடுக்கப்பட்ட வரட்டியில் பாத்திரம் வைத்து பச்சரிசி மற்றும் பசும்பால் இட்டு பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர்.
முன்னதாக கடந்த 4ம் தேதி காப்பு கட்டி அதன் பிறகு 6 ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு கண்ணுடைய அய்யனார் ஆலயத்தில் இருந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் கிராம சாவடியிலிருந்து சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது. 7ம் தேதி இரவு யானை வாகனத்திலும், 8 ம் தேதி அன்னபட்சி மற்றும் கொள்ளு திண்ணி குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
9ம் தேதி இரவு காவு பிடித்து காவு எரிதல், 10ம் தேதி இரவு சப்பரத்தில் சுவாமிகள் வீதி உலா, 11ம் தேதி பச்ச பட்டினியும் நேற்று (12ம் தேதி) அதிகாலை ஆறு மணிக்கு சுவாமிகள் தேரில் ஏற்றப்பட்டு தேர் வடம் பிடித்தலும், அதன் பிறகு முனியாண்டவர் வீதி உலா, மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடித்து தெற்கு தெரு, மேல தெரு, வடக்கு தெரு ஆகிய தெருகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிகண்ணுடைய அய்யனார் மற்றும் சாத்த பிள்ளை அய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் தேர் நிலைக்கு வந்தடைந்ததும் சுவாமிகள் இறக்கப்பட்டு கிராம சாவடிக்கு சென்றது. இரவு 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைந்தது. இதில் திருவெறும்பூர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதியைச் சேர்ந்த கிராமப் பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
The post கூத்தைப்பாரில் கண்ணுடைய அய்யனார் கோயிலில் தேரோட்டம் appeared first on Dinakaran.