
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சோமசுந்தரம் காலனியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
அப்போது, 'வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வழி என்ன?' என்று மாணவி ஒருவர் கேட்ட கேள்விக்கு, "பெரிய எண்ணங்கள் கொண்டிருக்க வேண்டும், நேரத்தை பலனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும், நேரம் தவறாமை, சுய ஒழுக்கம், படிப்பு உள்ளிட்டவைகளை மற்றவர்களுக்கும் சொல்லி கொடுக்க வேண்டும்" என்று கவர்னர் பதிலளித்தார்.
மேலும், தனது தாயார் கடுமையாக உழைப்பார் என்றும், அவர்தான் தனக்கு உத்வேகம் என்றும் கவர்னர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார். கலந்துரையாடலில் கேள்வி கேட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. பின்னர் மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.