கேரளா: மக்களை பிளவுபடுத்தி ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதே மோடி அரசின் நோக்கம் என வயநாடு மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பிரியங்காவுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினியை பிரியங்கா சந்தித்தபோது நடந்தது என்ன என்று உருக்கமாக குறிப்பிட்டார். வயநாடு மக்களவை தொகுதிக்கு வரும் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் வேட்பாளரான பிரியங்கா காந்தி 3 ஆம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார். இதையொட்டி வயநாடு தொகுதிக்குட்பட்ட மானந்தவாடி என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், எந்த வகையிலாவது ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதே மோடி அரசின் நோக்கம் என்று குற்றம்சாட்டினார். மக்களின் நல்வாழ்வைவிட பெரிய வணிக நிறுவனங்களின் நலன்களுக்கே மோடி அரசு முன்னுரிமை அளிக்கிறது என்றார். மோடி அரசு தன்னுடைய பெரு நிறுவன நண்பர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறது என்று விமர்சித்த பிரியங்கா காந்தி வெறுப்பை விதைத்து ஜனநாயக நிறுவனங்களை ஒடுக்கி மக்களை பிளவுபடுத்தி ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதே மோடி அரசின் நோக்கம் என்று குற்றம் சாட்டினார். அதே கூட்டத்தில் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக தொகுதியின் முன்னாள் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.
பணிவோடும், அன்புடனும் எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்பதே இந்தியாவின் முதன்மையான போராட்டம் என்று ராகுல் கூறினார். தனது தந்தை ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நளினியை சிறையில் சந்தித்த பிரியங்கா காந்தி அதன் பின்னர் உணர்ச்சிபூர்வமாகவும், அனுதாபமுள்ளவராகவும் மாறினார் என்றும் ராகுல் குறிப்பிட்டார். நளினி மீது பிரியங்கா காந்தி பரிவு கொண்டதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார். பிரியங்கா காந்தியை போன்று சகோதரியை பெற்ற தாம் அதிர்ஷ்டசாலி என்று ராகுல் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் மோடி அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். பணிவோடும், அன்புடனும் எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்பதே இந்தியாவின் முதன்மையான போராட்டம் என்று ராகுல் காந்தி கூறினார்.
The post வெறுப்பை விதைத்து ஆட்சியில் நீடிப்பதே மோடி அரசின் நோக்கம்: வயநாடு மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி குற்றசாட்டு appeared first on Dinakaran.