திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சுற்றுவட்டாரத்தில் வெறிநாய்கள் கடித்து செம்பறி ஆடுகள் உயிரிழப்பதை தடுக்கக் கோரியும், இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் திருப்பூர் எஸ்.பி, ஆர்.டி.ஓ பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெறிநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பதை கட்டுப்படுத்தவும், மேல் நடவடிக்கை மேற்கொள்ள வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய், காவல்துறை, கால்நடைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய 8 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைத்து திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் நடவடிக்கை எடுத்துள்ளர்.
திருப்பூர் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் அதிகரித்து வரும் தெரு நாய்களால், பொது மக்களுக்கும் கால் நடைகளுக்கும் தொடர் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் தெருநாய்களை கட்டுப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மற்றும் காங்கேயம் வட்டங்களில் மேலும் நாய்களால் கால்நடை பாதிப்பிற்குள்ளவதை தடுத்தல் மற்றும் தடுப்பு (Preventive) நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கீழ்க்கண்ட அலுவலர்கள் கொண்ட குழு அமைத்து இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது. வருவாய் கோட்டாட்சியர், காவல் கண்காணிப்பாளர், உதவி இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
மேற்கண்ட குழுவில் உள்ள அலுவலர்கள் மாதம் இரு முறை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நாய்களால் கால்நடைகள் பாதிப்பிற்குள்ளாவது குறித்து விவாதித்து அதனை தடுக்கும் வழிமுறைகள் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும். இந்நிகழ்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து அதனை சரிசெய்ய குழுவில் உள்ள அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நாய்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்தும் விதமாக அதற்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளும் பணியினை ஊராட்சி நிர்வாகம் மற்றும் கால்நடை பாராமரிப்புத்துறை ஆகியோர் இணைந்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். கால்நடைகளை நாய்களிடம் இருந்து பாதுகாப்பது குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்திட கால்நடை பராமரிப்புதுறையினர் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது
The post வெறிநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பதை கட்டுப்படுத்த 8 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைத்து திருப்பூர் கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.