
மழையில் நனைந்தாலோ அல்லது தண்ணீர் மாற்றம் காரணமாகவோ சிலருக்கு அடிக்கடி ஜலதோஷம், இருமல், சளி ஏற்படுவது வழக்கம். சிலருக்கு வெயில் காலத்திலும் சளி பிடிக்கும். வெயில் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், தும்மல், இருமல், சளி போன்றவை, பருவகாலங்களின் தட்பவெப்ப மாற்றங்களினால் மட்டும் அதிகம் ஏற்படுவதில்லை. ஒருவகை வைரஸ் கிருமிகளினால் தான் பெரும்பாலும் ஏற்படுகிறது.
அறிகுறிகள் கூட கிட்டத்தட்ட மற்ற நாட்களில் வருவது போலத்தான் வரும். மூக்கில் நீர் ஒழுகுவது, தும்மல் , லேசான காய்ச்சல் , லேசான கண் எரிச்சல் , லேசான உடல் வலி, இருமல் , கடைசியாக சளி துப்புதல் போன்றவை இருக்கும். உலகின் எல்லாப் பகுதியில் இருப்பவர்களுக்கும் , அதிக வெயில் காலத்தில் இம்மாதிரி ஏற்படத்தான் செய்யும். நிறைய பேருக்கு எந்தவித சிகிச்சையும் எடுக்காமல் , சாதாரணமாகவே சரியாகிவிடும். ஆனால் அதிக வெப்பத்தின் தாக்கமும், வெப்பக் காற்றிலுள்ள அதிக ஈரப்பதமும் சிலரின் உடலுக்கு துயரமான, விரும்பத்தகாத, மகிழ்ச்சியற்ற ஒரு சூழலை உருவாக்கி பாடாய்ப்படுத்திவிடுகிறது.
விற்பனை பிரதிநிதிகள் போன்ற வேலையில் உள்ளவர்கள், வெயிலோ, மழையோ தினமும் அதிகம் அலைய வேண்டியிருப்பதால், உடலிலிருந்து அதிகமாக வியர்வை வெளியேற வாய்ப்பு அதிகம். இதேபோல் உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கும் வெயில் காலங்களில் வழக்கத்தைவிட அதிக வியர்வை ஏற்படும். அதிக வியர்வை காரணமாக உடலிலுள்ள நீர்ச்சத்தைக் குறைந்துவிடும். வியர்வை உடலிலிருந்து அதிகமாக வெளியேறும்போது, அதிகமாக தண்ணீர் தாகமும் வர ஆரம்பித்துவிடுகிறது.
இந்த நேரத்தில் நாக்கு வறண்டு போகும். தொண்டை வறண்டு போகும். உதடு காய்ந்து போகும். உடல் சோர்வாகி விடும். உடனே நாம் குடிக்க தண்ணீர் தேடுவோம். அதிலும் குறிப்பாக அந்த அதிக வெயில் நேரத்தில் ஜில்லென்று குடித்தால் நல்லாயிருக்குமே என்று முடிவு பண்ணி, குளிர் பானங்களோ அல்லது குளிர்ந்த நீரோ எது கிடைத்தாலும் அதைக் குடித்துவிடுவோம். இந்தத் தண்ணீர் மூலம் தான் வைரஸ் கிருமி உடலுக்குள் புகுந்து, ஜலதோஷம், தும்மல், இருமல் கடைசியில் சளியை உண்டாக்கிவிடுகிறது.
இதுபோக, காற்று வழியாகவும் வைரஸ் கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்து சளியை உண்டாக்கிவிடும். வெயில் காலத்தில் ஜலதோஷத்தை ஏற்படுத்தி, சளியை உண்டாக்கும் வைரஸ் கிருமிகள் வேறு. குளிர்காலத்தில் ஜலதோஷத்தை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகள் வேறு.
வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், காய்ச்சி வடிகட்டிய குடிநீரை கையோடு எடுத்துச் செல்வது நல்லது. முடிந்தவரை வெளியில் தண்ணீர் குடிக்காமலிருக்க முயற்சி செய்யவேண்டும். மற்ற நாட்களை விட வெயில் காலங்களில், அதிகமாக தண்ணீர் குடிக்கவேண்டும்.
வெயிலில் தேவையின்றி செல்வதை தவிர்க்கவேண்டும். ஜலதோஷம் , தும்மல், இருமல் உள்ளவர்கள் அருகில் நிற்கக்கூடாது. வெளியில் அணிந்து செல்லும் உடைகளை வீட்டுக்கு வந்தவுடன் துவைக்கப் போட்டுவிட்டு, நன்றாக குளித்துவிடவேண்டும்.
தேவையான அளவு நன்றாகத் தூங்கவேண்டும், போதிய ஓய்வும் தேவை. வெளியில் சுற்றும்போது, கைகளைக் கொண்டு முகத்தைத் தொடுவதையோ, துடைப்பதையோ தவிர்க்க வேண்டும். கிருமிகள் கையிலிருந்து முகத்துக்கு மிகச் சுலபமாக போய்விடும்.
உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தவேண்டும். நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
சளி அதிகமாக வெளிவரவில்லையென்றால், நன்றாக தினமும் ஆவி பிடிக்கலாம். குறிப்பாக, ப்ரிட்ஜில் உள்ள உணவுப் பொருட்களை அதிகம் உபயோகிக்கக்கூடாது. வெயில் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட ஆசையாகத் தான் இருக்கும். ஆனால் பின் விளைவுகளை நினைத்துப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குளிக்க, குடிக்க எப்போதும் சுத்தமான தண்ணீரை உபயோகப்படுத்தவேண்டும்.
