வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்: வரும் 28ம்தேதி வரை வெயில் சுட்டெரிக்கும்

3 days ago 4

சென்னை: வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. இன்று முதல் வரும் 28ம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும். எனவே, மக்கள் தேவையின்றி வெளியே தலைகாட்ட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் பல மாவட்டங்களில் வெயில் சதத்தை கடந்தது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயிலின் தாக்கத்தால் காலை 11 மணிக்கு மேல் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க தொடங்கினர்.

பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்கிய காட்சியை காண முடிந்தது. இந்நிலையில், வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்பட கூடிய அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4ம் தேதி முதல் 28ம் தேதி வரை ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் ‘கத்திரி வெயில்’ காலம் கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 25 நாட்களுக்கு நீடிக்கும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.

அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது முதல் 7 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகும். 21வது நாளில் வெயில் உச்சத்தை தொடும். அதன்பிறகு படிப்படியாக வெயில் குறைய தொடங்கும். சூரியனுக்கு அருகில் வான்வெளியில் மே‌ஷம் எனும் நட்சத்திர மண்டல பகுதிகள் வருவதையே வெப்பம் மிகுந்த காலமாக உணர்கிறோம். கோடை காலத்தையொட்டி வரும் கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கோரத்தாண்டவம் ஆடும்.

அப்போது எல்லாம் தமிழ்நாட்டில் பல இடங்களில் உச்சபட்ச வெயில் பதிவாகும். அதிக வெப்பம் நிலவும் கத்திரி வெயில் காலகட்டத்தில் மதிய நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தேவையின்றி வெளியில் செல்லக்கூடாது. அதிக வெப்பநிலை வெப்பச் சோர்வு மற்றும் வெப்ப பக்கவாதம் போன்ற வெப்பம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கலாம். இது உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம்.  வெப்பமான வானிலை அதிக வியர்வையை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் போதுமான நீர் ஆகாரங்களை பருகவில்லை என்றால் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

அதீத நீரிழப்பு உடல் செயல்பாட்டை பாதிக்கலாம் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளை அதிகரிக்கலாம். எனவே கவனமாக இருந்து உடலைக் காத்துக்கொள்ள வேண்டும். பருத்தி ஆடைகளை அணிவதுடன் வெளியே செல்லும்போது குடைகளை எடுத்து செல்வது நல்லது. பொதுவாக, அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கும். ஆனால், சமீபகாலமாக அக்னி நட்சத்திர காலகட்டத்திலும் பரவலாக பல பகுதிகளில் கோடை மழை பொழிந்து குளிர்ச்சியை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 5ம் தேதி (நாளை) முதல் 7ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசவுகரியம் ஏற்படலாம். மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

5ம் தேதி (நாளை) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

6ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 11 இடங்களில் வெயில் சதம்
வெயிலிலின் கோரதாண்டவம் என்று அழைக்கப்படும் ‘அக்னி நட்சத்திரம்’ இன்று தொடங்குகிறது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக 11 இடங்களில் வெயில் சதம் அடித்து மக்களை கடும் இன்னல்களுக்கு ஆளாக்கியது. அதிபட்சமாக ‘வெயிலூர்’ என்று அழைக்கப்படும் வேலூரில் 105.8 டிகிரி வெயில் வாட்டி எடுத்தது.

அடுத்தபடியாக திருத்தணியில் 104 டிகிரி, திருச்சியில் 103.46 டிகிரி, சென்னை மீனம்பாக்கம் 103.28 டிகிரி, நாகப்பட்டினம் 103.1 டிகிரி, கரூர் பரமத்தியில் 103.1 டிகிரி, மதுரை விமான நிலையம் 103.1 டிகிரி, ஈரோடு 102.56, கடலூர் 101.84 டிகிரி, மதுரை நகரம் 101.48 டிகிரி, சேலம் 101.48 டிகிரியும் வெயில் பதிவானது.

The post வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்: வரும் 28ம்தேதி வரை வெயில் சுட்டெரிக்கும் appeared first on Dinakaran.

Read Entire Article