
சென்னை,
நாடு முழுவதும் இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலைக்கும், மே தின நினைவுச் சின்னத்திற்கும் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "இந்த சமுதாயத்திற்காக உழைக்கக்கூடிய அனைத்து தொழிலாளர்களுக்கும், பத்திரிகைத்துறை சார்ந்தவர்களுக்கும், ஒவ்வொருவரும் அந்தந்த சமூகத்திற்காக ஒவ்வொரு வகையிலும் உழைத்து வருகின்றனர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் மே தின வாழ்த்துக்களை, தொழிலாளர்கள் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.
இதனையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "திருச்சி மாவட்டத்தில் தற்போது 104 டிகிரி வெயில் உள்ளது. பள்ளிகள் ஜூன் மாதம் 2-ம் தேதி திறக்க முடிவு செய்துள்ளோம். கோடை விடுமுறை முடிந்து அன்றைய தினம் வெயிலின் தன்மையைப் பொருத்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார்.
பள்ளிகளில் அதிகம் அளவு கட்டணம் வாங்கக் கூடாது அதற்காக கட்டண நிர்ணய ஆணையமே வைத்துள்ளோம். முன்னாள் நீதி அரசர் தலைமையில் கமிட்டி என்ன சொல்கிறதோ அதன்படி வாங்க வேண்டும். நிர்ணயித்திருப்பதைக் காட்டிலும் அதிகப்படியாக கட்டணம் வாங்கினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.