
சென்னை,
மதுரையை சார்ந்த அம்மா ராஜசேகர், நடன இயக்குனராக 300 படங்களுக்கும் மேல் பணிபுரிந்துள்ளார். கோபி சந்த் நடிப்பில் 'ரணம்' என்ற பெயரில் முதல் படம் தெலுங்கில் இயக்கி, மெகா ஹிட் கொடுத்தவர். இவர் தற்போது அறிமுக நடிகர் ராகின் ராஜை வைத்து 'வெட்டு' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அங்கிதா, வேங்கை அய்யனார், பிரேம்நாத், ரோகித் எஸ்தர், அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், அம்மா ராஜசேகர் இயக்கிய 'வெட்டு' திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
அம்மா மீது அளவு கடந்த பாசம் வைத்து அவருக்காக எதையும் செய்ய துணிபவராக இருக்கிறார் நாயகன் ராகின் ராஜ். ஒரு கட்டத்தில் தாயின் உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் இருக்கும்போது கணவரை பிரிந்த காரணத்தையும் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற விருப்பத்தையும் மகனிடம் சொல்கிறார்.
தாயின் ஆசையை நிறைவேற்ற தந்தையை தேடி உத்தரபிரதேசத்துக்கு செல்லும் ராகின் ராஜ் அங்கு அவர் இன்னொரு பெண்ணை மணந்து குடும்பத்தோடு இருப்பதை பார்த்து அதிர்கிறார். ஆனாலும் அம்மாவுக்காக தந்தையை தன்னோடு அழைத்து வர முயற்சிக்கிறார். அப்போது தந்தை குடும்பம் ஒரு பிரச்சினையில் சிக்குகிறது. இதனால் ஏற்படும் திருப்பங்கள் என்ன? தந்தையை அவரால் அழைத்துச் வர முடிந்ததா? என்பது மீதி கதை.
ராகின் ராஜ் அப்பாவித்தனம், கையில் கத்தி எடுத்து ஆக்ரோஷம் காட்டும் வெறித்தனம் என இரு மாறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்தி கதாபாத்திரத்தில் நிறைவு சேர்த்துள்ளார். சண்டை காட்சிகளில் அதிரடி நாயகனாக மிரள வைக்கிறார். நாயகியாக வரும் அங்கிதா இயல்பான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை வசப்படுத்துகிறார். ரோகித், எஸ்தர் தம்பதியின் சிக்கன் கடை காமெடி சிரிக்க வைக்கிறது. ராதா, முக்கு அவினாஷ், விஜி சந்திரசேகர் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
வேங்கை அய்யனார் உடல்முழுவதும் கருப்பு நிறம் பூசி வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். ரத்தம் தெறிக்கும் அதீத வன்முறை காட்சிகள் பலவீனம். எஸ்.எஸ். தமன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஷியாம் கே.நாயுடு கேமரா சண்டை காட்சிகளை பிரமாண்டமாக படம்பிடித்துள்ளது. காதல், அதிரடி, அம்மா பாசம் மற்றும் சமூக பிரச்சினையுடன் ரசிக்க தகுந்த சுவாரசியமான படமாக கொடுத்து கவனம் பெறுகிறார் இயக்குனர் அம்மா ராஜசேகர்.
