ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் வெடிகுண்டு வீசுவதாக பேசிய வழக்கு தொடர்பாக வருகிற 20ம் தேதிக்குள் போலீஸ் ஸ்டேஷனில் நேரில் ஆஜராகி விளக்கம் தர நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, ஈரோடு போலீசார் சென்னையில் உள்ள வீட்டுக்கு நேரில் சென்று சம்மன் வழங்கினர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஜனவரி 28ம் தேதி ஈரோடு அசோகபுரம் நெரிக்கல்மேட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது ‘‘உன் பெரியார் வைத்துள்ளது வெங்காயம். என் தலைவன் (பிரபாகரன்) வைத்துள்ளது வெடிகுண்டு.
பி கேர் புல்’’ என பேசினார். சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும், மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர். அதன்பேரில், ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார், சீமான் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு நேற்று நேரடியாக சென்று, இடைத்தேர்தல் பிரசாரத்தில் ‘வெடிகுண்டு வீசுவதாக’ பேசிய வழக்கு தொடர்பாக வருகிற 20ம் தேதிக்குள் கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் வழங்கினர்.
* ஜெயில்ல போடுங்க..
சென்னை, நீலாங்கரை இல்லத்தில் சீமான் நேற்று அளித்த பேட்டி: எல்லா இடங்களிலும் வழக்குப்போட்டு, அலைய வைத்து மனச்சோர்வை உண்டாக்க வேண்டும் என அரசு நினைக்கிறது. எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள், நாங்கள் எதிர்கொள்வோம், என்னால்தான் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் தான் இப்படி செய்கிறார்கள். என்னை சிறையில் போட்டால் நன்றாக படிக்க முடியும். இதற்கெல்லாம் பயப்பட்டால் இந்த இடத்திற்கு வர முடியுமா. கட்சியிலிருந்து சிலர் விலகுவது பற்றிக் கேட்கிறீர்கள். அவரவர்களுக்கு ஓர் எதிர்பார்ப்பு இருக்கும். அது கிடைக்கவில்லை என்பதால் போகிறார்கள். பெரியாரை இகழ்ந்து பேசி விட்டேன் என கூறுகிறார்கள். பெரியாரை கொண்டாட நினைப்பவர்கள் அவரை புகழ்ந்து பேச வேண்டியதுதானே. இவ்வாறு சீமான் கூறினார்.
The post வெடிகுண்டு வீசுவதாக பேசிய வழக்கு பிப்.20க்குள் நேரில் ஆஜராக சீமானுக்கு போலீஸ் சம்மன்: நீலாங்கரை வீட்டுக்கு வந்து வழங்கினர் appeared first on Dinakaran.