வெங்கய்யா நாயுடு இல்ல திருமண விழா துணை ஜனாதிபதி, உள்துறை அமைச்சர், முதல்வர்கள் இன்று சென்னை வருகை: 5 அடுக்கு பாதுகாப்பு நீட்டிப்பு

1 week ago 4

சென்னை: முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு மகள் வழி பேரன், திருமண வரவேற்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை மாமல்லபுரத்தில் உள்ள பிரமாண்டமான 5 நட்சத்திர ரிசார்ட்டில் நடக்கிறது. இந்த திருமண வரவேற்பு விழாவில், கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.

விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு, சென்னை கிழக்கு கடற்கரை சாலை சென்று அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்பு காரில் மாமல்லபுரம் சென்று, வெங்கய்யா நாயுடு இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு, மீண்டும் மாமல்லபுரத்தில் இருந்து காரில் புறப்பட்டு இரவு 8.30 மணி அளவில் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து உடனடியாக தனி விமானத்தில், டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

அதேபோல், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு இரவு 7 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்து, அங்கிருந்து இரவு 8 மணிக்கு மாமல்லபுரம் செல்கிறார். அங்கு வெங்கய்யா நாயுடு இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு விட்டு, இரவு 8.35 மணிக்கு மாமல்லபுரத்தில் இருந்து அமித்ஷா, இரவு 9.35 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து இரவு 9.40 மணிக்கு தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

இதுபோல, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட சில மாநில முதலமைச்சர்கள், ஒடிசா, திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட சில மாநிலங்களின் கவர்னர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் வெங்கய நாயுடு இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, தனி விமானங்களில் இன்று சென்னை பழைய விமான நிலையம் வருகின்றனர். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, குடியரசு தின விழா பாதுகாப்புக்காக போடப்பட்ட 5 அடுக்கு பாதுகாப்பு முறை இன்று (31ம் தேதி) நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.

* டிரோன் பறக்க தடை
சென்னைக்கு இன்று துணை ஜனாதிபதி வருகையையொட்டி விமான நிலையம் முதல் முட்டுக்காடு, மகாபலிபுரம் வரையிலான வழித்தடங்களில் டிரோன் பறக்க தடை விதித்து பெருநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ராஜ் பவன் மற்றும் விவிஐபி பயணிக்கும் வழித்தடங்கள் ‘சிவப்பு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டு இன்று அந்த பகுதிகளில் மற்றும் வழித்தடங்களில், ரிமோட்லி பைலட் ஏக்கிராப்ட் சிஸ்டம்ஸ், ட்ரோன் ஆளில்லா விமானம், பறக்க விட தடை செய்யப்படுகிறது.

The post வெங்கய்யா நாயுடு இல்ல திருமண விழா துணை ஜனாதிபதி, உள்துறை அமைச்சர், முதல்வர்கள் இன்று சென்னை வருகை: 5 அடுக்கு பாதுகாப்பு நீட்டிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article