ஐதராபாத்,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட் 'சாவா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இதில் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். ராஷ்மிகா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 14ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், நேற்று இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா வீல் சேரில் வந்து கலந்து கொண்டார். இதற்குக் காரணம் என்னவென்றால், சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது ராஷ்மிகாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. அதனால் அவரால் நடிக்க முடியவில்லை. அவரை மருத்துவர்கள் ஓய்வு எடுக்க சொல்லி அறிவுறுத்தி இருந்தனர்.
ஆனால் காயத்தை பொருட்படுத்தாமல் 'சாவா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதற்கிடையில் கடந்த வாரம் மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியிலும் வீல் சேரில் வந்து கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.