புதுடெல்லி,
டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இந்தியா- டோகோ இடையிலான 2 நாள் ஆட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது.
இதில் முதல் நாளான இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், டோகோவின் லியோவா அயிட் அஜாவோன் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சசிகுமார் 6-2 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அணிக்கு முதல் புள்ளியை பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் மற்றொரு இந்திய வீரரான ராம்குமார் ராமநாதன், டோகோவின் தாமஸ் செடோட்ஜி உடன் மோதினார். இதில் சிறப்பாக விளையாடிய ராம்குமார் 6-0 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு 2-வது புள்ளியை பெற்றுக்கொடுத்தார்.
முதல் நாள் முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நாளை 2-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.