வீரம் பேசும் விளையாட்டு

3 hours ago 2

தமிழர்களின் பாரம்பரியம், வீரப்பெருமை பேசும் விளையாட்டுகளுள் ஜல்லிக்கட்டுக்கு மிக முக்கிய இடம் உண்டு. தமிழக அரசாணைப்படி, ஜனவரி முதல் மே வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தலாம். ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் கடந்த 4ம் தேதி நடந்தது. ஆனாலும், பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளே உலகப் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. ஜனவரி துவங்கினாலே, இதற்கான வேலைகள் ஜரூராக நடைபெறும். 3 முத்தான நாட்களில் மதுரையே கோலாகலப்படும்.

நேற்று முன்தினம் தைப்பொங்கல் நாளில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது. தமிழகத்திலேயே ஒரு மாநகர் பகுதியில் நடக்கும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. மிகச்சிறப்பாக நடந்த இந்த போட்டியில் 888 காளைகள் களமிறங்கின. 500 மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு மைதானங்களிலேயே மிகப்பெரியதான பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடலில் மஞ்சு விரட்டு கோலாகலமாக நடந்தது. நீதிமன்ற வழிகாட்டுதல்கள், அரசின் நெறிமுறைகளோடு போட்டிகள் நடந்தேறின.

விவசாயிகள் சங்கம் வேண்டுகோளுக்கிணங்க ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற காளையின் உரிமையாளருக்கு, ஜல்லிக்கட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிக காளைகளை அடக்கிய ‘மாவீரனுக்கு’ கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், பைக், தங்க நாணயங்கள் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. ஆண்களுக்கு நிகராக பெண்கள் உரிமையாளர்களாக இருந்து வழி நடத்திய காளைகளும் களமிறங்கின. மருத்துவம், குடிநீர், பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு திரைப்படம் என்றாலே கிளைமேக்ஸ் முக்கியமல்லவா? அதுபோல மதுரை மாவட்டத்தில் ஹாட்ரிக் போல அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற உள்ளன. பல ஆண்டுகளாக வெளிநாட்டினரும் விரும்பி வந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை ரசிப்பதுண்டு. தொடர்ந்து வெளிநாட்டினர் மதுரையில் தங்கி சுற்றுவட்டாரங்களில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்பது உண்டு. ஜல்லிக்கட்டை பார்வையிட்டு, வீரர்களை உற்சாகப்படுத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று அலங்காநல்லூர் வருகிறார்.

உழவுக்கு உறுதுணையாக விளங்கும் நிலம், நீர், சூரியன், மாடு, நீர்நிலைகளை கொண்டாடும் விழாக்கள், தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என ஹாட்ரிக் பொங்கல் விழாக்களாக கொண்டாடப்படுகின்றன. இதற்கேற்றார்போல இவ்வாரமே பொங்கல் விழா போல தொடர் விடுமுறையாக கிடைத்தது, அனைவருக்குமே மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்து விட்டது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்தை விட, உறியடித்தல், கபடி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் சிறப்பான முறையில் நடந்து வருகின்றன.

தென்மாவட்டங்களில் மாட்டுவண்டி கட்டி குலதெய்வ கோயில்களுக்கு செல்பவர்களும் அதிகம் உண்டு. இந்நாளில்தான் பிரிந்து கிடக்கும் சொந்தங்கள் ஒன்று கூடுவார்கள். எப்போதுமே பண்டிகைகள் மனதிற்கு மகிழ்ச்சியூட்டுபவை. விரும்பியோ, விரும்பாமலோ மொபைல் போனுக்குள்ளே மூழ்கி கிடப்பது இப்போது எல்லாம் நமக்கு சகஜமான ஒன்றாகி விட்டது. இந்த சூழலில் வீதியில் நடக்கும் வீரம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் நம்மை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தும். இறுக்கமான நிலையை தளர்த்துவதோடு, மனதையும் இலகுவாக்கும் இதுபோன்ற பண்டிகைகளை காலங்கள் மாறினாலும் ஜாலியாக கொண்டாடுவோம்…

The post வீரம் பேசும் விளையாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article