வீரபாண்டி முல்லையாற்று படுகையில் சிறுவர் பூங்கா அமைக்கப்படுமா?.. சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

1 month ago 13


தேனி: தேனி – வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் அருகே உள்ள முல்லையாற்றங் கரையில் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைகளான கொடைக்கானல் மற்றும் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்ட அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதனால் இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டமாக தேனி மாவட்டம் உள்ளது. தேனி மாவட்டத்தில் வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை உள்ளிட்ட அணைகள் உள்ளன. இதில் வைகை அணையில் உள்ள சிறுவர் பூங்கா சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் இந்த அணைப்பூங்காவிற்கு தேனி மாவட்டம் மட்டும் இல்லாமல் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கல்விச் சுற்றுலாவாக வைகை அணை பூங்காவிற்கு வந்து செல்கின்றனர்.

இது தவிர தேனி மாவட்டத்தில் சுற்றுலா மையங்களாக சுருளி அருவி, கும்பக்கரை அருவி, குரங்கனி கொட்டக்குடி பகுதிகள் உள்ளன. இத்தகைய சுற்றுலா தளங்களுக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தேனி மாவட்டத்தை ஒட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி, மூணாறு ஆகிய பகுதிகள் மிகப்பெரிய சுற்றுலா தலங்களாக அமைந்துள்ளன. இதனால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தேனி மாவட்டத்திற்கு வந்து அங்கிருந்தே கொடைக்கானல், தேக்கடி, மூணாறு உள்ளிட்ட சுற்றுலா மையங்களுக்கு சென்று வருகின்றனர்.

ஆன்மீக சுற்றுலா பயணிகள் வருகை அதிகம்
இதுமட்டுமல்லாமல் ஆண்டு தோறும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். தேனி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா மையங்கள் உள்ள நிலையில் ஆன்மீகத்தில் சிறந்து விளங்கும் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், குச்சனூர் சனீஸ்வரபகவான் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேனி மாவட்டத்திற்கு பக்தர்கள் ஆன்மீக சுற்றுலாவாக வந்து செல்கின்றனர்.

தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயிலில், ஆண்டு முழுவதும் உள்ள அனைத்து பண்டிகை தினங்கள் மட்டுமல்லாமல் சராசரியாக நாள்தோறும் இக்கோயிலுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு சென்று வருகின்றனர். இதுதவிர சித்திரை மாதம், எட்டு நாட்கள் சித்திரைத் திருவிழா வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் நடப்பது வழக்கம். எட்டு நாட்கள் நடக்கும் திருவிழாவில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுகின்றனர். அமாவாசை தினங்களில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி செய்வதற்கு ஏற்ற இடமாக வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் முல்லையாற்றுப்பகுதி அமைந்துள்ளது. இதனால் முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும், தர்ப்பணம் செய்யவும் இக்கோயிலில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.

வசீகரிக்கும் முல்லையாற்று தடுப்பணை
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமல்லாமல், வீரபாண்டியை கடந்து தேக்கடி, மூணாறு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும், சுருளி அருவி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் வீரபாண்டி வந்து இங்குள்ள முல்லையாற்றின் தடுப்பணையில் குளிப்பதை வழக்கமாக்கி உள்ளனர். இதனால் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் அருகே உள்ள முல்லையாற்றின் தடுப்பணையில் சிறப்பு நாட்கள் என்றில்லாமல் வருடத்தின் அனைத்து நாட்களிலும் குழந்தைகளுடன் வந்து ஆற்றில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் உள்ளனர்.

காலியாக உள்ள இடத்தில் சிறுவர் பூங்கா
இந்நிலையில், வீரபாண்டி முல்லையாற்றின் தடுப்பணை அருகே தற்போது திதி, தர்ப்பணம் கொடுப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதனருகே சுமார் 2 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு இடம் காலியாக ஆற்றின் கரையோரம் உள்ளது. இப்பகுதியில் தடுப்புச் சுவர் கட்டி, அதன் அருகில் சிறுவர் பூங்கா, சிறிய அளவிலான நீச்சல் குளம் அமைத்து படகு குலாம் அமைக்க வேண்டும். சிறுவர் பூங்காவில் சறுக்குகள், ஊஞ்சல்கள், ராட்டினங்கள் அமைத்தால், திருவிழா காலம் மட்டும் இல்லாமல், வீரபாண்டி வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் சிறுவர் பூங்காவில் பொழுதுபோக்கி மகிழ்ச்சியுடன் செல்ல வாய்ப்பு உருவாகும். இதனால் ஆற்றின் கரையோரம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் தேவை
முல்லைப்பெரியாற்று தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வரும் வழியில் சிலர் இயற்கை உபாதைகளை கழித்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் இயற்கை எழில் சூழ்ந்த தடுப்பணை அழகை கண்டு களிக்க செல்ல நினைக்கும் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்க வேண்டிய அவலமும் நீடித்து வருகிறது. சுகாதாரக் கேட்டை தவிர்க்க வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகம் தேனி-கம்பம் மெயின் சாலையில் இருந்து முல்லைப்பெரியாற்று தடுப்பணைக்கு செல்லும் பாதையிலும், பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தடுப்பணைக்கு செல்லும் சாலையிலும் நுழைவு பாதை அமைத்து, சிறு தொகையிலான கட்டணம் நிர்ணயித்து அப்பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, உடைமாற்றும் அறை, கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பேரூராட்சி நிர்வாகம் பதில்
இதுகுறித்து வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதாசசியிடம் கேட்டபோது, வீரபாண்டி பேரூராட்சியில் புகழ்வாய்ந்த அருள்மிகு கவுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களும், வீரபாண்டி வழியாக கேரளா செல்லும் பயணிகளும், இங்குள்ள முல்லையாற்றின் தடுப்பணை அழகினை கண்டு செல்கின்றனர். வீரபாண்டி முல்லையாற்று தடுப்பணையின் அருகே திதி, தர்ப்பணம் செய்யும் பகுதி முழுவதும் பேரூராட்சி நிர்வாகம் சுகாதாரத்தை பராமரித்து வருகிறது. அதேசமயம், முல்லைப்பெரியாறு தடுப்பணை அழகை ரசிக்கும் பயணிகளை மேலும் திருப்திப்படுத்த இப்பகுதியில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்க பொதுப்பணித்துறையோ, சுற்றுலாத் துறையோ முன்வர வேண்டும். இதனை நிர்வகிக்கும் பொறுப்பு பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தால் சிறுவர் பூங்கா அமைப்பதோடு, தடுப்பணை அருகே உடைமாற்றும் அறை, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தித் தந்து சிறப்பாக பராமரித்து சிறப்பான சுற்றுலாத்தலமாக மாற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

The post வீரபாண்டி முல்லையாற்று படுகையில் சிறுவர் பூங்கா அமைக்கப்படுமா?.. சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article