வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் மஞ்சள் நீராட்டு விழா

2 days ago 3

தேனி, மே 15: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் எட்டு நாட்கள் சித்திரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

திருவிழாவின்போது, தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வீரபாண்டி கவுமாரியம்மன்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மே 6ம் தேதி முதல் நேற்று முன்தினம்(13 ம்தேதி) வரை எட்டு நாட்கள் நடந்தது. கடந்த 9ம் தேதி கோயில் திருத்தேரோட்டம் துவங்கி 12ம் தேதி தேர் நான்கு வீதிகளையும் சுற்றி வந்து நிலையை அடைந்தது.

இதனையடுத்து, தேரில் இருந்த அம்மன் உற்சவர் தேரில் இருந்து இறங்கி தேரோட்டம் நடந்த வீதிகளில் தடம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து, அம்மன் உற்சவர் கோயிலுக்குள் சென்றது. இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி நடப்பட்ட கம்பம் பூஜை செய்யப்பட்டு அகற்றப்பட்டது. இதனையடுத்து, நேற்றுமுன்தினம் காலை கோயில் வளாகத்தில் ஊர்பொங்கல் விழா நடந்தது. இதில் பரம்பரை முறைதாரர்கள் மற்றும் வீரபாண்டி கிராமத்தினர் கோயில் முன்பாகவும், வீரபாண்டி கிராமத்திலும் ஊர்பொங்கல் படைத்தனர்.

சித்திரைத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, நேற்று காலை கோயிலில் அம்மன்உற்சவருக்கு சிறப்பு அபிசேகம் நடத்தப்பட்டு, மஞ்சள்நீர் தெளித்து கோயிலில் இருந்து ஊர்வலமாக வீரபாண்டி கிராமத்திற்குள் உள்ள கோயில் வீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து, வீரபாண்டி கிராமத்தினர் மஞ்சள் நீரினை ஒருவருக்கொருவர் தெளித்தபடி ஊர்வலமாக வீரபாண்டி கிராம கோயில் வீட்டிற்கு சென்றனர்.

The post வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் மஞ்சள் நீராட்டு விழா appeared first on Dinakaran.

Read Entire Article