ஊட்டி: 2026-ல் மட்டுமின்றி 2031-ம் ஆண்டிலும் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சிதான் தொடரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நாள் சுற்றுப்பயணமாக ஊட்டிக்கு வந்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் ரூ.5 கோடியில் கட்டப்பட்ட யானைப் பாகன்களுக்கான குடியிருப்புகள், முதுமலை புலிகள் காப்பகத்தில் 15 கி.மீ. தொலைவுக்கு ரூ.5 கோடியில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பி சேவை, வனச் சரகர்களின் பயன்பாட்டுக்காக ரூ.2.93 கோடியில் 32 வாகனங்களின் சேவை உள்ளிட்டவற்றைத் தொடங்கிவைத்தார். நேற்று முன்தினம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர்க் கண்காட்சியைத் தொடங்கிவைத்து, மலர் அலங்காரங்களைப் பார்வையிட்டார்.