
தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஓட்டப்பிடாரம், பாஞ்சாலங்குறிச்சியில் இந்த ஆண்டு நடைபெறும் வீரசக்கதேவி கோவிலின் 69-வது உற்சவ திருவிழா நாளை (9.5.2025) முதல் 11.5.2025 வரை ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது.
1. வீரசக்கதேவி கோவில் திருவிழாவினை 9.5.2025 அன்று காலை 6 மணி முதல் கோவில் வழிபாட்டில் அமைதியாக கலந்து கொண்டு, விழாவினை எந்தவிதமான அசம்பாவிதமுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படா வண்ணம் நடத்தி முடித்து கொள்ள வேண்டும்.
2. விழா மற்றும் இதர வைபவங்களை அமைதியான முறையில் சட்டம் ஒழுங்கு பாதிக்காத வகையில் நடத்திக் கொள்வதுடன், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்திட வேண்டும்,
3. விழாவிற்கு அனைத்து ஊர்களில் இருந்தும் வருபவர்கள் எக்காரணம் கொண்டும் வாடகை வாகனங்களில் வரக்கூடாது.
4. விழாவின்போது ஜோதி கொண்டு வருவது, வாகனங்களை நிறுத்துவது, வழித்தடங்கள் போன்ற நிகழ்வுகளை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்கும் முன்கூட்டியே தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும்.
5. வாகனங்களில் வருபவர்கள் திறந்த நிலையில் உள்ள வாகனங்களில் வர அனுமதி இல்லை. வாடகை வாகனங்களில் வர அனுமதி இல்லை. ஒலிப்பெருக்கிகள் மற்றும் கேரியர் பொருத்திய வாகனங்களுக்கு அனுமதி இல்லை. பிற சமூகத்தினரை புண்படுத்தும் வகையில் கோசங்கள் எழுப்பக்கூடாது. லாரி போன்ற கனரக வாகங்களில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
6. ஜோதி எடுத்து வருபவர்கள் வாள், ஈட்டி, கம்பு போன்ற ஆயுதங்களை கொண்டு வரக்கூடாது.
7. ஜோதி கொண்டு வருபவர்கள் காவல்துறையினர் சொல்லும் வழித்தடத்தில் மட்டுமே செல்ல வெண்டும். ஜோதி கொண்டு வரும்போது இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வருவதற்கு அனுமதி இல்லை. வாகனங்கள் மீது ஏறிக்கொண்டோ, கோசங்கள் போட்டுக்கொண்டோ செல்லக் கூடாது.
8. உரிய முன் அனுமதி பெற்று கயத்தாறு ஜோதி, பசுவந்தனை முடிமண், சிலோன் காலனி, ஓட்டப்பிடாரம் ஊமைத்துரை தோரண வாயில் வழியாக எடுத்து செல்ல வேண்டும். திருச்செந்தூர் கோவில், கோவில்பட்டி, சிந்தலைக்கரை, வைப்பாரிலிருந்து வரும் ஜோதிகள் குறுக்குச்சாலை, ஊமைத்துரை தோரண வாயில் வழியாகவும், திருநெல்வேலியில் இருந்து வரும் ஜோதி புதுக்கோட்டை- தட்டப்பாறை வழியாகவும் வந்து அனைத்து ஜோதிகளும் ஓட்டப்பிடாரம் வழியாக ஊமைத்துரை தோரண வாயில் வழியாக எடுத்து செல்ல வேண்டும்.
9. ஜோதி எடுத்து வரும் நபர்கள் கோவில் விழா கமிட்டியாளர்களால் அனுமதி பெற்ற கடிதம் மற்றும் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே ஜோதி எடுத்து வர அனுமதிக்கப்படுவார்கள்.
10. ஜோதி எடுத்து வரும் வாகனங்கள் மற்றும் விழாவிற்கு வரும் அனைத்து வாகனங்களும் 'பார்க்கிங்' பகுதியில் காவல்துறையினர் சொல்லும் இடங்களில்தான் நிறுத்த வேண்டும். வேறு இடங்களில் முறையற்ற வகையில் நிறுத்த கூடாது.
11. தற்போது வீரசக்கதேவி கோவில் ஆண்டுவிழா கலை நிகழ்ச்சிகள் முறையான அனுமதி பெற்றும் ஒலிப்பெருக்கிகள் இரவு 10 மணிக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டாது.
12. வழக்கம்போல் திருச்செந்தூரிலிருந்து மாவீரன் ஊமைத்துரை தொண்டர்படை சார்பாக எடுத்துவரப்படும் ஜோதியுடன் ஒரு வாள் மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படுகிறது.
13. திருச்செந்தூரிலிருந்து 9.5.2025 அன்று ஜோதியை எடுத்து மாலை 6.30 மணிக்குள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள் கொண்டு வந்து விட வேண்டும்.
14. ஜோதி எடுத்துவரும் குழுவினர் எந்த ஒரு இடத்திலும் கூடாமல் பொதுமக்களுக்கு இடையூறு செய்யா வண்ணம் சீராக வந்து கொண்டே இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வீரசக்கதேவி கோவில் விழாக்களை கண்ணியம் மற்றும் கட்டுப்பாட்டுடன் எவ்வித அசம்பாவிதமுமின்றி விழாவிற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் அனைத்து ஒத்துழைப்யையும் பொதுமக்கள் தரவேண்டும் என்றும், மேற்சொன்ன விதிமுறைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல்துறையால் அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலை மற்றும் நியாயமான தேவைகளுக்காக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.