சென்னை,
'சேதுபதி, சித்தா' படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. முதலில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் டீசர் வெளியாகி யூடியூப்பில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்து உலகளவில் சாதனை படைத்துள்ளது.
இந்த படத்தில் விக்ரம் தவிர எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், சித்திக், சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. புகைப்படங்களை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக உள்ளதால், ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.