
புனே,
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்துத்துவ சித்தாந்தவாதியுமான வி.டி. சாவர்க்கர் குறித்து ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நேரில் ஆஜராவதிலிருந்து புனேவில் உள்ள சிறப்பு கோர்ட்டு நிரந்தர விலக்கு அளித்துள்ளது.
முன்னதாக வீர சாவர்க்கரின் உறவினர் சத்யாகி சாவர்க்கர், ராகுல்காந்திக்கு எதிராக புனே கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். இது தொடர்பான அந்த மனுவில், "கடந்த 2023-ம் ஆண்டு லண்டனில் பேசிய ராகுல்காந்தி, வீர சாவர்க்கர் தான் எழுதிய புத்தகம் ஒன்றில் தானும், தனது 5, 6 நண்பர்களும் சேர்ந்து முஸ்லிம் நபர் ஒருவரை அடித்தோம். அதனால் மகிழ்ச்சியாக உணர்ந்ததாக கூறியுள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு கற்பனையானது, பொய்யானது, தீங்கு விளைவிக்கக்கூடியது" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சத்யாகி மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். இதற்கிடையே அவதூறு வழக்கில் ராகுல்காந்தி சார்பில் ஆஜரான வக்கீல் மிலிந்த் பவார், கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து ராகுல்காந்திக்கு நிரந்தர விலக்குக்கோரி கடந்த மாதம் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை புனே சிறப்பு கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது நீதிபதி தனது உத்தரவில், "குற்றம் சாட்டப்பட்டவர் மக்களவையில் எதிர்க்கட்சித்தலைவராக உள்ளதால் அவர் மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும். மேலும், அவர் "இசட்-பிளஸ்" பாதுகாப்பில் உள்ளார். விசாரணையில் அவர் கலந்துகொண்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதை கருத்தில்கொண்டு, இந்த வழக்கில் ராகுல்காந்தி ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.