வீதிக்கு வந்து விஜய் மக்களை சந்திக்க வேண்டும் - பிரேமலதா

3 months ago 13

சென்னை,

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

ஆளுங்கட்சி தங்களுடைய பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள எதையாவது ஒன்றை சொல்லி தப்பித்துக் கொள்ள பார்ப்பார்கள். எப்போதுமே மத்திய அரசை குற்றம் சாட்டும் தமிழக அரசு என்ன செய்கிறது? இந்தியாவில் அதிக கடன் இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் முதல்முறையாக யாருடைய கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு சாதனை செய்தது தேமுதிக மட்டும்தான். தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முஸ்லீம் மக்கள் அண்ணன் தம்பிகளாக பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தனை வருடம் வராத பிரச்சினை இப்போது வருகிறது. இதற்கு பின்னால் முற்றிலும் அரசியல் இருக்கிறது. மதத்தைப் பிரித்து ஜாதியைப் பிரித்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

விஜய்யை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்தவர் விஜயகாந்தான். அவர் எங்கள் வீட்டுப்ப்பிள்ளை. அதற்கு எந்தவித மாற்றுக்கருத்து இல்லை. சினிமா வேறு அரசியல் வேறு, இதை விஜய் இடமே நேரடியாக தெரிவித்து இருக்கிறேன். சினிமாத் துறையில் அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார் என்றால் அதை நாம் பாராட்ட வேண்டும். என்ன சாதிக்கப் போகிறார் என்ன சரித்திரம் படைக்கப் போகிறார் என்பதை பார்க்க நாங்களும் காத்திருக்கிறோம். அரசியலில் நிலைத்து நிற்க விஜய் நாலுக்கு நாலு சுவற்றுக்குள் அரசியல் செய்யாமல் வீதிக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும். பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article