தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்துக்கொண்டு மண்ணின் மக்களின் உணர்வுகளுக்கு எதிரான ஒவ்வாத கருத்துகளை கூறிக்கொண்டு குழப்பம் ஏற்படுத்தி அதில் சுகம் காண முயல்வது என்பது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிடித்தமான ஒன்று. ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுபவர் மட்டுமே. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கட்டுப்பட்டவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளது. ஆளுநர் என்பது வெறும் அலங்கார பதவி மட்டுமே. இந்த உண்மை கூற்றுகளை தமிழ்நாடு முதல்வர் தொடங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை பல முறை எடுத்து கூறியும் ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பிற்கு மட்டும் புரிவதில்லை.
ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு அரசிடம் மோதுவதும் இறுதியில் மூக்குடைபடுவதும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் பெரிய குட்டு வைத்தது. அதோடு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியது.
இந்த சட்டப்போராட்டம் என்பது மாநில சுயாட்சிக்காக அன்று முதல் இன்று வரை தொடர்ந்து போராடியும், குரல் கொடுத்தும் வரும் திமுகவின் வரலாற்றில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
உச்சநீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 10 மசோதாக்களில் ஒன்று தான் ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சரை பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக நியமிக்கும் மசோதா. கோர்ட் உத்தரவிற்கு பிறகு தமிழ்நாடு அரசிதழிலும் இது வெளியிடப்பட்டது. இதன்மூலம் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியானது ஆளுநரிடமிருந்து பறிக்கப்பட்டு முதல்வரின் கைகளுக்கு சென்றுவிட்டது. அதன் பிறகாவது ஆளுநர் ஆர்.என்.ரவி சுதாரித்திருக்கலாம். மாறாக ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்தார்.
வேந்தர் பதவியில் இருந்தே நீக்கப்பட்ட பிறகு எப்படி துணை வேந்தர்கள் மாநாடு நடத்தப்படும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை கேள்வி எழுப்பினர். ஆனாலும் நடத்தியே காட்டுவேன் என வீண் பிடிவாதம் பிடித்தார். இந்த முறை தனக்கு துணையாக நாட்டின் துணை ஜனாதிபதியையும் அழைத்துக் கொண்டார். தமிழ்நாட்டின் உண்மையான கள நிலவரம் தெரியாமல் துணை ஜனாதிபதியும் ஒப்புக்கொண்டார். நேற்று துணை வேந்தர்கள் மாநாடு ஊட்டியில் தொடங்கியது. இந்த மாநாட்டினை முற்றிலுமாக அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணித்தனர்.
அரசியல் அரிச்சுவடு தெரியாதவர்களுக்கு கூட இதுதான் நடக்கும் என்று நன்கு தெரியும். வேறு வழியின்றி பெயரளவில் ஒன்றிய அரசு, சில தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களை வைத்து மாநாடு என்ற பெயரில் நடத்தினார். மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, துணை வேந்தர்களை மாநாட்டில் கலந்து கொள்ளவிடாமல் தமிழக அரசு மிரட்டியதாக புகாரினை வாசித்து தனது தோல்விக்கு காரணம் கற்பிக்க முயன்றார். இதற்கு பதிலாக முன்கூட்டியே ஆளுநர் சுயமாக சிந்தித்திருந்தால் இந்த வீண் அவமானத்தை தவிர்த்திருக்கலாம்.
The post வீண் அவமானம்! appeared first on Dinakaran.