“மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தேன், அம்மா பாட வந்தேன் ” என அழகாக பாடிக்கொண்டே வீணை வாசிக்கிறார் நெய்வேலியை சேர்ந்த வீணை இசைக் கலைஞர் டாக்டர். விஜயலஷ்மி. வாய்பாட்டு இசையும் வீணையும் எனது இரு கண்கள் என புன்னகைக்கிறார் விஜயலஷ்மி. நெய்வேலியிலிருந்து குடும்பச் சூழல் காரணமாக சென்னைக்கு இடமாற்றம் பெற்ற விஜயலஷ்மி தற்போது குரோம்பேட்டை பகுதியில் பல மாணவ மாணவிகளுக்கு வீணை பயிற்சி அளித்து வருகிறார். பல்வேறு இசை மேடைகளிலும் விழாக்களிலும் இவரை வீணையுடன் பார்க்கலாம். நெய்வேலி டாக்டர் விஜயலஷ்மி அவர்களின் இசை ஆசிரியர் பணி மற்றும் வீணை இசைக் கலை குறித்தும் நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.
இசை உங்களுக்கு அறிமுகமானது எந்த வயதில்?
எனது குடும்பமே இசைக் குடும்பம் தான். எனது தாத்தா பாட்டி, தாய் தகப்பன் என அனைவருமே இசை கலைஞர்கள் தான். எனது அண்ணன் மிருதங்க கலைஞர். எனது இரத்தத்திலேயே இசை கலந்துள்ளது என்றால் அது மிகையில்லை. நான் ஏழு வயது முதல் வீணை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். எனது முதல் குரு கோமதி கிருஷ்ண மூர்த்தி ஆல் இந்தியா ரேடியோ ஏ கிரேட் ஆர்டிஸ்ட். இன்னொரு குரு ராஜம் நிவாசன் அவர்களும் A high கிரேட் ஆர்டிஸ்ட். மற்றொரு குரு சரோஜா பாலசுப்பிரமணியம் அவர்களும் ஏ கிரேட் ஆர்டிஸ்ட்தான். இவர்களை தவிர சரஸ்வதி, கோகிலா என இரண்டு குருமார்களிடம் வீணை வாசிக்க கற்றுக்கொண்டேன். எனது 15 வயதிலேயே வீணை சொல்லித்தர துவங்கினேன். இசைதான் எனது உயிர் மூச்சு என்பதால் இசையை முழு நேரமாக தொடர வேண்டும் என்கிற ஆசையில் பிஏ இசை, எம் ஏ இசை என பயின்றேன். வீணையை முதன்மை பாடமாகவும் இசையை ஒரு பாடமாகவும் படித்தேன். அதன் பிறகு எனது வீணை இசைக்காக கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்தது. தற்போது வரை கடந்த நாற்பதாண்டு காலமாக வீணையை வாசித்து வருகிறேன்.. மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வருகிறேன்.
இசையை முழுநேர பணியாக தொடர்ந்தது எப்போது?
எனது எம் ஏ இசை படிப்பை முடித்ததும், மத்திய அரசு பணியான நெய்வேலி என் எல் சி பள்ளியில் இசை ஆசிரியராக பதினெட்டு வருடங்களாக பணியாற்றினேன். அதேபோன்று தனியாக
கேட்பவர்களுக்கு வீணை பயிற்சியை தனி வகுப்பாக எடுத்து வந்தேன். அதன் பிறகு குடும்பச் சூழல் காரணமாக பணியில் விருப்ப ஒய்வு பெற்றுக்கொண்டு சென்னைக்கு வந்து விட்டேன். சென்னையில் கடந்த எட்டு ஆண்டுகள் தனியார் பள்ளியில் இசை ஆசிரியராக பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோன்று தனி பயிற்சிகளும் பல பேருக்கு அளித்து வருகிறேன்.
உங்களது மாணவர்கள் குறித்து..?
இந்த நாற்பதாண்டு காலத்தில் ஏறக்குறைய ஐநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு இசைப்பயிற்சிகள் அளித்துள்ளேன். நெய்வேலியிலும் சென்னையிலும் எனது மாணவ மாணவிகளோடு பல மேடை
களில் வாசித்த அனுபவங்கள் எங்களுக்கு இருக்கிறது. தற்போது நேரடி வீணை பயிற்சிகளும், ஆன்லைன் தனி பயிற்சிகளும் எடுத்து வருகிறேன். தற்போது நான் வசிக்கும் குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த மாணவர்கள் பலர் நேரடி வகுப்புகளில் வந்து கற்றுக் கொள்கிறார்கள். ஆன்லைன் வகுப்புகளில் இந்தியா முழுவதும் உள்ள பல பகுதி மாணவ மாணவிகளுக்கு கற்றுத்தர முடிகிறது. அதே போன்று சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு மாணவ மாணவியருக்கும் கற்றுத் தருகிறேன். நான் ஆல் இந்திய ரேடியோவின் பி கிரேட் ஆர்டிஸ்ட். பல்வேறு திருவிழாக்கள் மற்றும் கோவில்களில் எனது மாணவர்களுடன் வீணை வாசித்துவருகிறோம். திருவையாறு தியாகராஜர் விழாவில் வீணை வாசித்தது மறக்க இயலாத அனுபவங்கள்.
உங்களுக்கு கிடைத்த அங்கீகாரங்கள் மற்றும் பாராட்டுக்கள் குறித்து..?
எனது வீணை மற்றும் இசை சார்ந்த விஷயங்களுக்காக நான் பல்வேறு பாராட்டுதல்களையும், கௌரவங்களையும் பெற்றுள்ளேன் என்பது மகிழ்ச்சியான விஷயம். இதற்காக பல்வேறு விருதுகளும் எனக்கு கிடைத்தது. இசை ஆசிரியராக நான் பணியாற்றிய காலத்தில் சிறந்த ஆசிரியர் விருது கிடைத்தது. குண அபிவிருத்தி விருது, மேதா அபிவிருத்தி, சுந்தரி அவார்ட், அப்துல் கலாம் விருது, வேர்ல்ட் ரெகார்ட்ஸ் அசிவர்ஸ் வழங்கிய பெண் சிங்கம் விருது., நடனலோக நாட்டியாலயா சிறந்த வித்வான் விருது என நிறைய விருதுகளை பெற்றுள்ளேன்.
இசையில் எதிர்கால திட்டங்கள் பற்றி..
இசையை கற்றுக்கொள்வதே தெய்வாம்சம் என்பார்கள். நான் கற்றுக் கொண்ட இசையை அடுத்த தலைமுறைக்கு நன்றாக கடத்தி விடவேண்டும். இன்னும் நிறைய குழந்தைகளுக்கு இசை கற்றுக்கொடுக்க வேண்டும். தற்போது ஆன்லைன் யுகம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள இசையை விரும்பும் உள்ளங்களுக்கு எனது இசையை கற்றுத்தரவேண்டும். எனது குடும்பமே இசைக் குடும்பம் என்பதால் எனது மகனும் நன்றாக வீணை வாசிப்பார் . அடிப்படையில் சாப்ட்வேர் என்ஜினியராக இருந்தாலும் நல்ல வீணை கலைஞனாக பெயரெடுத்து வருகிறார். எனது கணவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் இசையில் நல்ல ஈடுபாடு மிக்கவர். எனது வளர்ச்சிக்கு எனது குடும்பமே காரணம் என்றால் அது மிகையில்லை. எனது வீணை இசையால் அனைவரையும் வசமாக்க வேண்டும் என்பதே எனது நீண்ட விருப்பம் என்கிறார் வீணை இசைக் கலைஞர் டாக்டர் நெய்வேலி விஜயலஷ்மி.
– தனுஜா ஜெயராமன்
The post வீணை இசையே எனது மூச்சு : டாக்டர் நெய்வேலி விஜயலஷ்மி! appeared first on Dinakaran.