அண்ணாநகர்: டி.பி சத்திரம் கால்வாய் சாலை முதல் சந்து பகுதியில் வசிப்பவர் வினோத் (44), இவரது வீட்டில் நடராஜ் (60) என்பவர் 6 லட்சம் லீசுக்கு குடியிருந்து வந்தார். கடந்த ஆண்டு நடராஜ் மனைவி சாந்தி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அது முதல் நடராஜ் மது அருந்தி விட்டு வந்து வீட்டில் ரகளை செய்து வந்துள்ளார். எனவே வீட்டு உரிமையாளர் வினோத் லீசுக்கு குடியிருக்கும் நடராஜிடம் வீட்டை காலி செய்யுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடராஜ், மது அருந்தி விட்டு வந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த வினோத்துக்கு சொந்தமான இருசக்கர வாகனம் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளார்.
இதில் அங்கு நின்று கொண்டிருந்த 4 வாகனங்களும் தீப்பற்றி எரிந்ததை பார்த்து ஓடிவந்த வினோத் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து பல மணிநேரம் போராடி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ வேகமாக பரவி மளமளவென எரிந்ததால் இதனை கண்டு பயந்துபோன அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சென்னை கீழ்ப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் 5 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் தீயில் எரிந்து எலும்புக்கூடானது.
இதுகுறித்து, வீட்டின் உரிமையாளர் வினோத் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சதீஷ் (35) ஆகிய இருவரும் டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மதுபோதையில் இருசக்கர வாகனங்களை தீவைத்து கொளுத்திய நடராஜை கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த பகீர் வாக்குமூலத்தில், ‘‘வினோத் வீட்டில் 6 லட்சம் லீசுக்கு குடியிருந்து வந்தேன். எனது மனைவி இறந்து போன துக்கத்தில் மது பழக்கத்தில் அடிமையானேன். இதனால் வீட்டின் உரிமையாளர் வினோத் வீட்டை காலி செய்யும்படி தினமும் டார்ச்சர் செய்து வந்தார்.
எனவே, ஆத்திரத்தில் அவரது பைக்கை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய போது பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளும் எரிந்துள்ளது. எனக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் அவரது பைக்கை தீ வைத்த போது மற்ற பைக்குகளும் எரிந்து விட்டன என்று தெரிவித்துள்ளார். மேலும் வாடகைதாரர் நடராஜ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். நடராஜ் மதுபோதையில் பெட்ரோல் ஊற்றி பைக்குகளில் தீ வைக்கும் சிசிடிவி காட்சி வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* 2 பைக்குகளுக்கு தீவைப்பு
வில்லிவாக்கம் தாதங்குப்பம் ராமகிருஷ்ணா தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). காஸ் அடுப்பு பழுது நீக்கும் வேலை செய்து வருகிறார். கடந்த 21ம் தேதி வீட்டின் அருகில் வசிக்கும் உறவினர் வாசு மற்றும் அவரது மனைவி அமுதா சண்டை போட்டுள்ளனர். ரமேஷ் தடுத்து நிறுத்தி அமுதாவை பல்லாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வாசு நேற்று முன்தினம் ரமேஷ் வீட்டிற்குச் சென்று அவரை அடித்துள்ளார். பிறகு நேற்று அதிகாலை உறவினர்களுடன் ரமேஷ் வீட்டுக்குச் சென்று, அவரது இரண்டு இரு சக்கர வாகனங்களை தீ வைத்து கொளுத்தி உள்ளார். இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தார். போலீசார் ஆவடியைச் சேர்ந்த வாசுவின் உறவினர் ராமசாமி (41) என்பவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வாசு, சக்திவேல், முருகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
*
வியாசர்பாடி சாந்தி நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரகலா (50). இவர் தனியார் சூப்பர் மார்க்கெட் ஊழியர். இவர் தனது இரு சக்கர வாகனத்தை நேற்று முன்தினம் மாலை வீட்டின் கீழே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். நேற்று அதிகாலை 4 மணியளவில் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சந்திரகலா வீட்டின் கதவை தட்டி, உங்களது இரு சக்கர வாகனம் தீப்பற்றி எரிகிறது எனக் கூறியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த சந்திரகலா உடனடியாக வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து சந்திரகலா கொடுத்த புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post வீட்டை காலி செய்யும்படி உரிமையாளர் டார்ச்சர் 5 இரு சக்கர வாகனங்கள் பெட்ரோல் ஊற்றி எரிப்பு: லீசுக்கு வசித்தவர் கைது appeared first on Dinakaran.