சென்னை,
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நில எடுப்பிலிருந்து 2,002 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்பட்டதன் மூலம் பயன்பெற்ற பயனாளிகள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (4.10.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்த அறிவிக்கை செய்யப்பட்ட நிலங்களில் முதற்கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் 2002.21 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்களித்து ஆணை வழங்கி, தங்களது நீண்ட கால பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு அளித்ததற்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10 பயனாளிகள் சந்தித்து, தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்த அறிவிக்கை வழங்கப்பட்ட நிலங்கள், கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலங்கள் ஆகியவற்றிற்கு நீண்ட காலமாக பொதுமக்கள் தடையின்மை சான்று கோரியும், நில எடுப்பிலிருந்து விலக்களிக்கக் கோரியும் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத இப்பிரச்சினை குறித்து அரசிடம் மனுக்கள் அளித்து வந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக முதல்-அமைச்சரின் முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் சிறப்பு புகார் பெட்டிகள் 16 இடங்களில் அமைக்கப்பட்டு, அதன்மூலம் 4,488 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை பரிசீலித்து முடிவு எடுக்க 10.10.2023 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் ஆணையம் மூலம் நில நிர்வாக ஆணையர் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது.
குழுவின் கவனமான பரிசீலனைக்குப் பிறகு முதற்கட்டமாக, பல்வேறு மாவட்டங்களுக்குட்பட்ட 2002.21 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்களித்து தற்போது ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் பயன்படுத்தப்படாத சூழ்நிலையில் அவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அவற்றையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை தொடரப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியின்போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஜி.எஸ். சமீரன் ஆகியோர் உடனிருந்தனர்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.