வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ரூ.527 கோடியில் 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 hours ago 1

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.527.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.207.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 வணிக வளாகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (20.5.2025) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 527 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 207 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 வணிக வளாகங்களையும் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

* தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது, அவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதி ஏற்படுத்துவது அவசியம் என்று கருதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து, அங்கு வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

* தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் திறந்து வைக்கப்பட்ட புதிய குடியிருப்புகளின் விவரங்கள்

அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் சென்னையில் கைலாசபுரம் திட்டப்பகுதியில் தூண் மற்றும் 14 தளங்களுடன் 63 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் 392 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;

விருதுநகர் மாவட்டம், சம்மந்தபுரம் திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 80 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் 864 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;

மதுரை மாவட்டம், உச்சபட்டி திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 60 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் 672 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;

புதுக்கோட்டை மாவட்டம், சந்தைபேட்டை திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 53 கோடியே 44 இலட்சம் ரூபாய் செலவில் 576 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;

கள்ளக்குறிச்சி மாவட்டம், கீரணூர் பகுதி – 2 திட்டப் பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 57 கோடியே 18 இலட்சம் ரூபாய் செலவில் 512 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;

திருப்பூர் மாவட்டம், ஹைடெக் பார்க் நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் எட்டு தளங்களுடன் 45 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவில் 432 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் காமராஜ் நகர் – பெருந்தொழுவு திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 20 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவில் 192 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;

காஞ்சிபுரம் மாவட்டம், சாலமங்கலம் பகுதி – 1 திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 51 கோடியே 5 இலட்சம் ரூபாய் செலவில் 420 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;

கடலூர் மாவட்டம், கீழக்குப்பம் பகுதி-1 திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 30 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவில் 288 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், கீழக்குப்பம் பகுதி 2 திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 5 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் 48 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பாலக்கொல்லை திட்டப்பகுதியில் இரட்டை வீடுகள் 16 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் 182 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், திருவதிகை திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 15 கோடியே 37 இலட்சம் ரூபாய் செலவில் 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 14 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;

திருவாரூர் மாவட்டம், கண்டிதம்பேட்டை திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 10 கோடியே 53 இலட்சம் ரூபாய் செலவில் 80 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;

கரூர் மாவட்டம், வேலம்பாடி திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 2 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவில் 32 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 527 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இன்றைய தினம் முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ள இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. “நம் குடியிருப்பு, நம் பொறுப்பு” திட்டத்தின் கீழ் அனைத்து திட்டப்பகுதிகளிலும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள்வரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 152 திட்டப் பகுதிகளில் 5,946.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 52,397 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சமூகத்திலுள்ள அனைத்து வருவாய் பிரிவினர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்தி தருவதை தலையாய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாரியம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான வீட்டுவசதி தீர்வுகளை வழங்கி வருகிறது. மேலும், தற்போது இவ்வாரியம் உயரமான கட்டடங்கள், வணிக மற்றும் அலுவலகக் கட்டடங்கள், மறுகட்டுமானத் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது.

இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில், 773.64 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 3113 தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள், 841.70 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1447 அடுக்குமாடி குடியிருப்புகள், 56.31 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1603 மனை மேம்பாட்டு திட்டம், 117.17 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 10 வணிக வளாகங்கள், 67.32 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 7 வாரிய கோட்ட அலுவலகங்கள் மற்றும் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் நகர் ஊரமைப்பு இயக்ககத்திற்கு 10.88 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 3 கோட்ட அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

* தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களை திறந்து வைத்தல்

சென்னை மாவட்டம், நெற்குன்றத்தில் 25 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், சி.ஐ.டி நகர் பகுதி 6-ல் 64 கோடியே 67 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், சி.ஐ.டி நகர் பகுதி 7-ல் 66 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் மற்றும் மதுரை மாவட்டம், தோப்பூரில் 51 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் என மொத்தம் 207 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.

The post வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ரூ.527 கோடியில் 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article