வீட்டு வசதி வாரியத்தில் நீடித்து வரும் 35 ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு காண குழு அமைப்பு: அமைச்சர் முத்துசாமி பேட்டி

1 week ago 4

சென்னை: வீட்டு வசதி வாரியத்தில் கடந்த 35 ஆண்டுகாலமாக நீடித்து வரும் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைமைச்செயலகத்தில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: வீட்டுவசதி வாரியத்தின் சார்பாக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பாக வீடு கட்டுவதற்காக எடுக்கப்பட்ட நிலங்கள் பயன்படுத்தப்படாமல் கிடந்த இடங்களை கண்டறிய 16 இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன. அந்த புகார்கள் 5 வகைகளாக பிரிக்கப்பட்டன. ஏற்கனவே எதிர்காலத்தில் 10 ஆயிரம் ஏக்கர் எடுக்கலாம் என 30 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டிருந்த இடங்களில் பலர் இடங்களை விற்று வீடுகள் கட்டி விட்டனர் என்பதால் அந்த இடங்களில் இருப்பவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அந்த 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தை முந்தைய திட்டங்களுக்காக எடுக்கப் போவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 4 லட்சம் பேர் பயனடைவார்கள்.

தற்போது மக்களிடம் இருந்து வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் 5 வகையாக பிரிக்கப்பட்டு 1 வது வகை மற்றும் 2வது வகையை சேர்ந்தவர்களுக்கு வீட்டுவசதி வாரியம் நோட்டீஸ் அளித்துள்ளது. அவர்களுக்கு இடத்தை திருப்பிக் கொடுப்பதில் பிரச்னை இல்லை. அடுத்ததாக 3 மற்றும் 4 வகையினருக்கு வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளதை மறைந்து பல இடங்களில் நில உரிமையாளர்கள் வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர். எனவே இதில் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஆலோசனை கூறுவதற்காக ஓய்வு பெற்ற 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரும் ஏப்ரல் இறுதியில் அவர்கள் தங்கள் பரிந்துரைகளை அரசுக்கு சம்ர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும். இறுதியாக 5வது வகையை சேர்ந்தவர்களில் சிலர் வாரியத்தின் நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியிருப்பவர்களாக வருகின்றனர். அதன்படி, வாரியம் நிர்ணயிக்கும் விலையை அவர்களிடத்தில் கேட்டுப் பார்க்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். நிருபர்கள் சந்திப்பின் போது வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post வீட்டு வசதி வாரியத்தில் நீடித்து வரும் 35 ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு காண குழு அமைப்பு: அமைச்சர் முத்துசாமி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article