
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டம் (ராமநகர்) தாவரகெரே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் இருந்தனர். தம்பதி கூலி வேலை செய்து வருகிறார்கள். அவர்களது மகன் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறான். அந்த சிறுமி அரசு பள்ளியில் படித்து வந்தாள்.
நேற்று முன்தினம் தம்பதி, அவர்களது மகன் வேலைக்கு சென்றிருந்தனர். அப்போது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். மாலையில் கடையில் இருந்து திரும்பிய சிறுவன் தனது தங்கை பலத்த ரத்தகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். இதுபற்றி தனது பெற்றோருக்கு அவன் தகவல் தெரிவித்தான்.
இதுபற்றி அறிந்ததும் தாவரகெரே போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சிறுமியின் முகத்தில் பலமாக தாக்கி கொலை செய்திருப்பதும், சிறுமி கற்பழிக்கப்பட்டு இருப்பது பற்றிய அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது. இதுகுறித்து தாவரகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடிவந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவே தாவரகெரே அருகே பதுங்கி இருந்த வாலிபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல் தெரியவந்தது. அதாவது கைதானவர் ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், ராமநகர் மாவட்டத்தில் வசித்து வருவதும் தெரியவந்தது. அந்த வாலிபர் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவதுடன், கஞ்சா பழக்கத்துக்கும் அடிமையாகி இருந்துள்ளார்.
அதன்படி, கடந்த 8-ந்தேதி மாலையில் தாவரகெரேயில் வீட்டு முன்பு நின்ற மோட்டார் சைக்கிளையும், செல்போனையும் திருடி விட்டு சுற்றித்திரிந்துள்ளார். அதே நேரத்தில் சிறுமியின் குடும்பத்தினர் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் தான் வீட்டுக்கு வருவதும், அந்த சந்தர்ப்பத்தில் சிறுமி தனியாக இருப்பது பற்றியும் வாலிபருக்கு தெரிந்துள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் கஞ்சா போதையில் சிறுமியின் வீட்டுக்கு வாலிபர் சென்றுள்ளார்.
அங்கு தனியாக இருந்த சிறுமியை கற்பழித்ததுடன், வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரால் முகத்தில் தாக்கி கொலை செய்திருக்கிறார். மேலும் அந்த சிலிண்டரை திருடி சென்று அவர் விற்பனை செய்ததும் தெரியவந்தது. கைதான வாலிபர் மீது தாவரகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.