பந்தலூர் : பந்தலூர் அருகே மழவன்சேரம்பாடி பகுதியில் ஆபத்தான மரத்தை வெட்டுவதற்கு வருவாய்த்துறை அனுமதி வழங்கியும் வனத்துறை அலட்சிய போக்கால் முதியவர் அலைக்கழிப்புக்கு ஆளாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட மழவன்சேரம்பாடி பகுதியில் வசித்து வருபவர் முதியவர் முருகையா. இவரது மனைவி வள்ளியம்மா.
இவர்களது வீட்டின் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு முறையாக வருவாய்த்துறைக்கு விண்ணப்பித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்தை கிராம நிர்வாக அலுவர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்து வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்தனர்.
தொடர்ந்து, கூடலூர் கோட்டாட்சியர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆபத்தான மரங்களால் எந்த நேரத்திலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்பகுதியில் மேலும் சில குடியிருப்புகள் இருப்பதால் ஆபத்தான மரத்தை வனத்துறையினர் வெட்டி அகற்ற வேண்டும் என அதற்கான உத்தரவு கடிதம் முதியவரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆபத்தான மரத்தை அகற்றாமல் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு மரத்தை வெட்டி அகற்றாமல் சுணக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.
இதையடுத்து இதுகுறித்து முதியவர் முருகையா கூறுகையில், ‘‘எனக்கு 82 வயது ஆகிறது. வனத்துறையினர் மரத்தை வெட்டாமல் என்னை அலைக்கழிப்பு செய்து வருகின்றனர். தற்போது கால அவகாசம் முடிந்து விட்டது மரத்தை வெட்ட முடியாது என கூறி வருகின்றனர். மழைக்காலம் துவங்கும் முன்பு ஆபத்தான மரத்தை வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
The post வீட்டின் அருகே ஆபத்தான மரத்தை வெட்ட அனுமதி கிடைத்தும் முதியவரை வனத்துறை அலைக்கழிப்பு appeared first on Dinakaran.