வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை: அதிமுக நிர்வாகி, வக்கீல் உட்பட 8 பேருக்கு இரட்டை ஆயுள்

4 hours ago 1

நெல்லை: பழிக்குப்பழியாக வீடு புகுந்து வாலிபரை வெட்டிக்கொன்ற அதிமுக நிர்வாகி, வக்கீல் உட்பட 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது. நெல்லை மாவட்டம் வீரவநல்லூர், கோட்டைவாசல் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சுரேஷ் (27). கூலி தொழிலாளியான இவரை, 2011ல் அம்பாசமுத்திரத்தில் ஒரு கொலை வழக்கிலும், 2013ல் வீரவநல்லூரில் ஒரு கொலை வழக்கிலும் போலீசார் கைது செய்தனர். இதில் 2013ல் வீரவநல்லூரில் கொல்லப்பட்ட வெள்ளப்பாண்டியனின் உறவினர்கள் பழிக்குபழியாக சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டனர். இந்நிலையில், 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி காலையில் சுரேஷ் அவரது வீட்டில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார்.

அந்த காலை வேளையில் அவரது தந்தை செல்வராஜும் தனது வீட்டிற்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த 4 பேரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென 2 பைக்குகள் மற்றும் ஒரு காரில் வந்த கும்பல் அரிவாள், கம்பு, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவர்களது வீட்டிற்குள் புகுந்தது. அப்போது செல்வராஜிடம் பேசிக்கொண்டிருந்த 4 பேரும் அலறி அடித்து ஓடினர். அவர் தனது மகனை காப்பாற்ற கத்தி கூச்சலிட்டார். இதனால் குளித்துக் கொண்டிருந்த சுரேஷ் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அந்த கும்பல் சுரேஷை கழுத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது. இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வக்கீல் செந்தில்குமார் (39), அவரது தந்தை சந்திரன் (65), வீரவநல்லூர் அதிமுக பேரூர் செயலாளர் முருகேசன் (45), மதியழகன் (45), அவரது தம்பி நம்பிராஜன் (32), பிச்சுமணி (41), காந்த் (37), விஜய் என்ற மலையப்பன் (29), ஒரு சிறுவன் உட்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் 13 பேர் மீது போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி விடுவிக்கப்பட்டு 8 பேர் மீதான நீதிமன்ற விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி பத்மநாபன் நேற்று தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் 8 பேருக்கு 2 பிரிவுகளின் கீழ் இரட்டை ஆயுள் தண்டனையும் தலா ரூ.2000 அபராதமும் விதித்தார். ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

The post வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை: அதிமுக நிர்வாகி, வக்கீல் உட்பட 8 பேருக்கு இரட்டை ஆயுள் appeared first on Dinakaran.

Read Entire Article