திருமயம்: திருமயம் அருகே பிரச்சனைக்குரிய கல் குவாரிகளில் கனிம வளத்துறை அதிகாரிகள் ட்ரோன் மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜகுபர் அலி என்பவர் அப்பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வரும் கல் குவாரி உரிமையாளர்களால் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு 5 பேரில் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜகுபர் அலி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமயம் அருகே உள்ள துளையானூர் கிராமத்தில் கொலை குற்றம் சாட்டப்பட்ட ராசு, ராமையா ஆகியோருக்கு சொந்தமான கல்குவாரிகளில் திருச்சி, நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கனிம மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் நேற்று மாலை ஆய்வு மேற்கொள்ள வந்தனர்.
அப்போது போதிய வெளிச்சம் இல்லாததால் இன்று காலை முதல் ட்ரோன் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வானது அடுத்த மூன்று நாட்களுக்கு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆய்வுக்குப் பின்னரே முழு விவரம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே கல்குவாரி தொடர்பாக புகார் அளித்த நபர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கல் குவாரிகளில் ஆய்வு பணி மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post திருமயம் அருகே கல்குவாரிகளில் கனிம வள அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.