தேனி. ஜன. 6: தேனி அருகே மேய்ச்சலுக்கு சென்ற 5 ஆடுகள் தொட்டியில் இருந்த விஷம் கலந்த தண்ணீரை குடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் சேகர். இவர் வீட்டருகே கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் குடியிருக்கும் பகுதிக்கு அருகே உள்ள கண்மாய் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இதன்படி நேற்று காலை வழக்கம் போல சேகர் ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச் சென்றார். அவரது ஆடுகள் கண்மாய் பகுதியிலுள்ள ஒரு தரிசு நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.
இந்நிலையில், திடீரென மேய்ச்சலில் இருந்தவற்றில் 5 ஆடுகள் வாயில் நுரை தள்ளியபடி தரையில் விழுந்து துடிதுடித்து உயிரிழந்தன. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சேகர், ஆடுகள் மேய்ந்த பகுதியில் சென்று பார்த்த போது அங்குள்ள குடிநீர் தொட்டியில் இருந்த நீரில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. மேய்ச்சலுக்கு இடையே ஏற்பட்ட தாகத்திற்கு ஆடுகள் இந்த விஷம் கலந்த நீரை பருகியதால் இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இச்சம்பவம் ஊஞ்சாம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post விஷம் கலந்த தண்ணீர் குடித்து மேய்ச்சலுக்கு சென்ற 5 ஆடுகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.